மதுரை அருகே தாய்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அவரது 5 மாத குழந்தைக்கும் தொற்று உறுதியாகி இருக்கிறது
தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா நோயின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா தொற்று நேற்று 536 பேருக்கு புதியதாக உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்திருக்கிறது. இன்றைய நிலவரப்படி 4,406 பேர் கொரோனாவில் இருந்து பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 234 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 7,270 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்து வரும் நிலையில் 81 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழ்நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக தலைநகர் சென்னை விளங்கிறது. அங்கு நாளுக்கு நாள் எகிறி வந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று வெளியான அறிவிப்பின்படி சென்னையில் மட்டும் 364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் சென்னையில் மொத்தமாக 7,117 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முடுக்கி விட்டிருக்கிறது. இதனிடையே தமிழகத்தில் அதிர்ச்சி தரும் செய்தியாக குழந்தைகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
அந்த வகையில் மதுரையில் 5 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மதுரை கருங்காலக்குடி அருகே இருக்கும் நெல்லுகுண்டுபட்டி பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண்ணிற்கு அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டது. காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு தனிமை சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே அவருக்கு 5 மாத ஆண் குழந்தை இருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தைக்கும் பரிசோதனை நடந்தது. அதில் தாயிடம் இருந்து குழந்தைக்கு தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் குழந்தையை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மதுரையில் தற்போது வரை 163 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபட்டிருக்கிறது. 3 பேர் பலியாகி இருக்கும் நிலையில் 53 பேர் சிகிச்சையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.