ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரஸால் முடங்கிப் போயிருக்கும் நிலையில் மக்களுக்கு உதவுவதற்காக தான் யாசகம் பெற்ற பத்தாயிரம் பணத்தை மதுரை ஆட்சியரிடம் வழங்கி இருப்பதாக கூறிய பூல்பாண்டி இதேபோல 10 தென் மாவட்டங்களுக்கு உதவ இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த உலகத்தையும் கொரோனா வைரஸ் என்னும் கொடிய நோய் மொத்தமாக முடக்கி போட்டுள்ளது. கடந்த டிசம்பரில் சீன நாட்டில் உருவான அந்நோய் உலகின் 213 நாடுகளுக்கும் பரவி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரையில் 48 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை தாக்கி சுமார் 3.20 லட்சம் உயிர்களை காவு வாங்கியிருக்கிறது. கொரோனா வைரஸ் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உலக பொருளாதாரமும் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை அரசுகள் எடுத்து வருகின்றன. ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறு நாடுகளிலும் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மக்களை காக்கும் வகையில் அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. தன்னார்வலர்கள் பலர் அமைப்புகள் மூலமாகவும் தனி நபர்களாகவும் தங்களால் ஆன உதவிகளை நலிவடைந்த மக்களுக்கு செய்யும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மதுரையில் மக்களிடம் யாசகம் பெற்ற 10 ஆயிரம் பணத்தை முதியவர் ஒருவர் கொரோனா நிவாரண நிதியாக வழங்கியிருக்கிறார். தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பூல்பாண்டி(65). மதுரை பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக கோவில் வாசல்களில் மக்களிடம் யாசகம் பெற்று வந்தார். தற்போது கொரோனா பரவுதல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அங்கு இருக்கும் முகாமில் பூல்பாண்டி தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தான் சேமித்து வைத்திருந்த 10 ஆயிரம் பணத்தை கொரோனா நிவாரண நிதியாக அளிக்க விரும்பினார்.
அதை அங்கிருந்த அதிகாரிகளிடம் அவர் தெரிவிக்கவே நெகிழ்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக முதியவரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினயிடம் அழைத்து சென்றனர். அங்கு தான் சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த பத்தாயிரம் பணத்தை கொரோனா நிவாரண நிதியாக அவர் வழங்கினார். அவரை மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர், அதிகாரிகள் என அனைவரும் பாராட்டினர். இதுதொடர்பாக அவர் கூறும்போது, கடந்த 40 வருடங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர் என பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் கோவில்கள், சுற்றுலா இடங்களில் சென்று மக்களிடம் யாசகம் பெற்று வந்ததாகவும் அதன்மூலம் கிடைக்கும் பணத்தை தனது அன்றாடத் தேவைக்குப் போக தென் மாவட்டங்களில் இருக்கும் அரசு பள்ளிகளுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வாங்கி கொடுத்து இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரஸால் முடங்கிப் போயிருக்கும் நிலையில் மக்களுக்கு உதவுவதற்காக தான் யாசகம் பெற்ற பத்தாயிரம் பணத்தை மதுரை ஆட்சியரிடம் வழங்கி இருப்பதாக கூறிய பூல்பாண்டி இதேபோல 10 தென் மாவட்டங்களுக்கு உதவ இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பொதுமக்களிடம் இருந்து பெற்ற பணத்தை இக்கட்டான சூழலில் அவர்களுக்கு உதவுவதற்காகவே இதை செய்வதாக குறிப்பிட்டிருக்கும் முதியவரின் இச்செயல் பலருக்கும் முன்மாதிரியாக விளங்கிறது.