ஒரே நாளில் 163 கோடி ரூபாய்..! டாஸ்மாக்கிற்கு அள்ளிக்கொடுத்த மதுப்பிரியர்கள்..!

By Manikandan S R SFirst Published May 17, 2020, 9:09 AM IST
Highlights

தமிழகத்தில் நேற்று மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் 163 கோடி ரூபாய் அளவில் அரசுக்கு வருமானம் கிடைத்துள்ளது.

இந்தியா முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் அசுர வேகம் எடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,585 ஆக உயர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாட்டில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மே 7ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டன. தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்படும் என அரசு அறிவித்திந்திருந்தது. கொரோனா பரவுதல் அதிகரித்து வரும் சூழலில் டாஸ்மாக் கடைகளை திறப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என டாஸ்மாக்கை மூடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையில் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. 

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் தீர்ப்பில் மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு உச்ச நீதிமன்றம் இடைகால தடை விதித்தது. இதனால் தமிழகத்தில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. டாஸ்மாக் திறக்க பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய வழிகாட்டுதல்களை நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடைக்கு வருகிறவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் சமூக விலகலை கடைபிடிக்கவும் கூறப்பட்டுள்ளது. மேலும் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் விதமாக டோக்கன் வழங்கும் முறையை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதனிடையே நேற்று மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் 163 கோடி ரூபாய் அளவில் அரசுக்கு வருமானம் கிடைத்துள்ளது.

மாநிலத்தில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 44.7 கோடி ரூபாய் அளவில் மது விற்பனை நடந்துள்ளது. திருச்சி மண்டலத்தில் ரூ. 40.5 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.41.07 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ.33.01 கோடியும் சென்னை மண்டலத்தில் ரூ.4.2 கோடியும் வசூலாகி இருக்கிறது. இதன்மூலம் டாஸ்மாக் வருவாய் மொத்தமாக 163 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. மதுக்கடைகள் திறக்க தொடர்ந்து எதிர்ப்புகள் நிலவி வந்த போதும் நீண்ட நாட்களுக்கு பிறகு தாராளமாக மது விற்பனை நடப்பதால் குடிமகன்கள் கடைகளில் குவிந்து வருகின்றனர். சிலர் கடைகள் மீண்டும் அடைக்கப்படும் அச்சத்தில் தங்களுக்கு தேவையான மதுவை வாங்கி வீட்டில் தேக்கி வைப்பதையும் காண முடிகிறது. அதன்காரணமாகவே டாஸ்மாக்கிற்கு வருமானம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!