தமிழகத்தில் உள்ள கோவில்கள், ஜூன் 1ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் என்ற வதந்திகளுக்கு, அறநிலையத்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கோவில்கள், ஜூன் 1ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் என்ற வதந்திகளுக்கு, அறநிலையத்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 22-ம் தேதி முதல் மக்கள் ஊரடங்கு, அதைத் தொடர்ந்து இரண்டு மாதங்களாகத் தொடர் ஊரடங்கு நிலவி வருகிறது. இதனால், இந்தியாவிலுள்ள திருக்கோயில்களில் வழிபாடுகள் நிறுத்தப்பட்டன. வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெற்றுவந்தாலும், பக்தர்கள் அதில் கலந்துகொள்ள முற்றிலும் தடை விதிக்கப்பட்டது.
தற்போது, மெல்ல மெல்ல ஊரடங்கு தளர்வுகள் செய்யப்பட்டு வருகிற நிலையில், சில மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் பொதுப் போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, ஒருசில மாநிலக் கோயில்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய வழிபாட்டுக்கும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில், வருகிற ஜூன் 1-ம் தேதி முதல் வழிபாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாகப் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், இதனை அறநிலையத்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது தொடர்பாக இந்து அறநிலையத்துறை சார்பில் கூறுகையில்;- மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்ட பிறகே, சமய வழிபாட்டு தலங்கள், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும். எனவே, புரளிகளை பக்தர்கள் நம்ப வேண்டாம்; தவறான தகவல் வெளியிடும் சமூக ஊடங்கங்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் அறநிலையத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.