மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா பாதிப்பு வார்டில் காண்டிராக்டரின் மனைவி, 2 மகன்கள் மற்றும் ராஜபாளையத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் உள்ளிட்ட 5 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்த காண்டிராக்டரின் மூத்த மகனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த 54 வயதான காண்டிராக்டர் கொரோனா தொற்று காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனி வார்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதான் தமிழகத்தில் முதல் கொரோனா உயிரிழப்பாகும்.
இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களது ரத்த மாதிரியும் பரிசோதனக்கு அனுப்பப்பட்டன. இதில் கட்டிட காண்டிராக்டரின் மனைவி மற்றும் 2-வது மகனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது மதுரை அரசு ராஜாஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பரிசோதனை ஆய்வு மையத்தில் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். தற்போது, மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா பாதிப்பு வார்டில் காண்டிராக்டரின் மனைவி, 2 மகன்கள் மற்றும் ராஜபாளையத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் உள்ளிட்ட 5 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.