முகாமிலிருந்து தப்பிய வாலிபர் மதுரை ரிங் ரோடு பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் லிப்ட் கேட்டு தனது சொந்த கிராமத்தை அடைந்து இருக்கிறார். அங்கு சென்று தனது உறவினர்கள் சிலரையும் அவர் சந்தித்திருக்கிறார். இதனால் போலீசார் அவர் யார் யாரை சந்தித்தார் என்கிற பட்டியலை தயார் செய்து அவர்களை தனிமையில் இருக்குமாறு எச்சரித்துள்ளனர்.
உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்குநாள் அதிகரித்து தற்போது அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 727 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே வெளிநாடுகளில் கடந்த ஒரு மாதத்தில் இந்தியா வந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அதன்படி கடந்த 23ஆம் தேதி துபாயில் இருந்து நான்கு பேர் மதுரை விமான நிலையம் வந்தனர். அவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு முகாமுக்கு அழைத்து சென்று கண்காணிப்பில் வைத்து உள்ளனர். அவர்களில் சிவகங்கை மாவட்டம் இடையப்பட்டியைச் சேர்ந்த 23 வயது வாலிபர் ஒருவரும் இருக்கிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் திடீரென அந்த வாலிபர் முகாமிலிருந்து காணாமல் போயுள்ளார். போலீசார் அவரை தீவிரமாக பல இடங்களில் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை.
இதையடுத்து தனிப்படை அமைத்த போலீசார் வாலிபரின் சொந்த கிராமத்தில் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவரது செல்போன் எண்ணையும் ஆய்வு செய்ததில் அவரது சொந்த கிராமத்தில் இருக்கும் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை சுற்றி வளைத்த போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை அவர் காதலித்து வந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக கொரோனா முகாமிலிருந்து தப்பி வந்துள்ளார். இதை அறிந்த உறவினர்கள் இருவருக்கும் நள்ளிரவில் அங்கிருக்கும் ஒரு கோவிலில் வைத்து திருமணம் நடத்தியுள்ளனர்.
வாலிபரை எச்சரித்த போலீசார் மீண்டும் முகாமிற்கு அழைத்துச் சென்றனர். இதனிடையே முகாமிலிருந்து தப்பிய வாலிபர் மதுரை ரிங் ரோடு பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் லிப்ட் கேட்டு தனது சொந்த கிராமத்தை அடைந்து இருக்கிறார். அங்கு சென்று தனது உறவினர்கள் சிலரையும் அவர் சந்தித்திருக்கிறார். இதனால் போலீசார் அவர் யார் யாரை சந்தித்தார் என்கிற பட்டியலை தயார் செய்து அவர்களை தனிமையில் இருக்குமாறு எச்சரித்துள்ளனர். வாலிபருக்கு நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று எதுவும் இல்லை என்று தெரியவந்த போதும் கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் சில நாட்கள் கண்காணிக்கப்பட இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.