கடுமையான காய்ச்சலால் சிறுவன் அவதிப்பட்டு வரவே கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் என்று பெற்றோர்கள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து பாதிப்பை போக்கும் என நம்பி மூலிகை மருந்து ஒன்றை சிறுவன் திராவிட செல்வத்திற்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. திராவிட செல்வத்திற்கு மட்டுமின்றி வீட்டில் இருக்கும் கவிதா, மற்ற இரு சிறுவர்களும் அருந்தியுள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இருக்கிறது புதுப்பட்டி கிராமம் இந்த ஊரைச் சேர்ந்தவர் முத்துக்கருப்பன். இவரது மனைவி கவிதா. இந்த தம்பதியினருக்கு திராவிடச் செல்வம், பெரியார் செல்வம், விஸ்வா என 3 மகன்கள் உள்ளனர். அங்கிருக்கும் ஒரு பள்ளியில் சிறுவர்கள் படித்து வந்தனர். தற்போது கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் 31-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறுவர்கள் பெற்றோருடன் வீட்டில் இருந்தனர். இந்த நிலையில் சிறுவன் திராவிட செல்வத்திற்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது. கடுமையான காய்ச்சலால் சிறுவன் அவதிப்பட்டு வரவே கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் என்று பெற்றோர்கள் அச்சம் அடைந்தனர்.
இதையடுத்து பாதிப்பை போக்கும் என நம்பி மூலிகை மருந்து ஒன்றை சிறுவன் திராவிட செல்வத்திற்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. திராவிட செல்வத்திற்கு மட்டுமின்றி வீட்டில் இருக்கும் கவிதா, மற்ற இரு சிறுவர்களும் அருந்தியுள்ளனர். இதனிடையே மூலிகை மருந்தை குடித்த சிறிது நேரத்தில் நான்கு பேருக்கும் வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துக்கருப்பன் உடனடியாக மனைவி மற்றும் மூன்று மகன்களையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு 4 பேரும் கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் மருத்துவர்களின் அறிவுரையின்றி தாமாக முன்வந்து அருந்திய மருந்துகளால் தற்போது விபரீதம் ஏற்பட்டு உள்ளது. எனவே மக்கள் யாரும் மருத்துவர்களின் அறிவுரை இன்றி கொரோனாவிற்கு எந்த சிகிச்சையும் எடுத்துக்கொள்ள கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது.