தடையை மீறி பொது இடத்தில் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்..! 600 பேர் மீது வழக்கு பதிவு..!

By Manikandan S R S  |  First Published May 22, 2020, 1:37 PM IST

மதுரை மகபூப்பாளையம் அன்சாரி தெருவில் நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் 10.30 வரை பொதுப்பாதையில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் சமூக விலகலை கடைபிடிக்காது தொழுகை நடத்தி இருக்கின்றனர்.


இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்திலும் தீவிரமடைந்து வருகிறது. தற்போதைய நிலையில் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனிடையே நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கு தற்போது 4ம் கட்டத்தை எட்டியுள்ளது.

Latest Videos

undefined

மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அண்மையில் மத்திய அரசு உத்தரவிட்டது. எனினும் பாதிப்புகள் குறைவாக இருக்கும் பகுதிகளில் ஊரடங்கு நடைமுறைகளில் மாநில அரசுகள் தளர்வுகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழகத்தில் பாதிப்பு குறைவாக இருக்கும் 25 மாவட்டங்களில் போக்குவரத்து உள்ளிட்ட விதிகளில் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. எனினும் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் போன்ற வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கான தடை தொடர்ந்து நீடித்து வருகிறது. கோவில் திருவிழாக்கள், பண்டிகைகள் என மக்கள் ஒன்று திரளும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 3 நாட்களில் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலேயே நோன்பு மற்றும் தொழுகையை நிறைவேற்ற அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் அரசின் உத்தரவை மீறி மதுரையில் பொது இடத்தில் தொழுகை நடத்திய 500க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மதுரை மகபூப்பாளையம் அன்சாரி தெருவில் நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் 10.30 வரை பொதுப்பாதையில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் சமூக விலகலை கடைபிடிக்காது தொழுகை நடத்தி இருக்கின்றனர்.

இதுகுறித்த தகவலறிந்த காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்தவர்களை கலைந்து போகச் செய்தனர். மேலும் தடை உத்தரவை மீறி திரண்டதாக 550 ஆண்கள் மற்றும் 50 பெண்கள் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

click me!