மதுரை அரசு மருத்துவமனையில் திடீர் மின்சாரம் தடைப்பட்டு, வெண்டிலேட்டர் இயங்காததால் தலைக்காய சிகிச்சை அவசர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அரசு மருத்துவமனையில் திடீர் மின்சாரம் தடைப்பட்டு, வெண்டிலேட்டர் இயங்காததால் தலைக்காய சிகிச்சை அவசர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் நேற்று மாலை இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டியது. இதனால் மின் கம்பிகள் அறுந்து மின் வினியோகம் பல இடங்களில் துண்டிக்கப்பட்டது. இதே போன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டர் இயக்கப்பட்டது. ஆனால், அதுவும் திடீர் பழுது அடைந்தது. இதனால் மருத்துவமனை வளாகம் நேற்றிரவு இருளில் மூழ்கியது. இதற்கிடையே தலைக்காய சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் கருவிகளும் மின்தடையால் செயல் இழந்தது.
இந்நிலையில் ஆக்சிஜன் கிடைக்காமல் அங்கு சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதில் மல்லிகா, ரவிச்சந்திரன், பழனியம்மாள் உட்பட 5 பேர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து உயிரிழந்தவர்களின் உறவினர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அரசு மருத்துவமனை டீன் வனிதா கூறுகையில், ‘‘நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக திடீர் மின் தடை ஏற்பட்டது. உடனடியாக நாங்கள் பேட்டரியை இயக்கி, இயங்காமல் போன வென்டிலேட்டரை சீரமைத்தோம். சுவாசக்கருவி இயங்காமல் போனதால், யாரும் இறக்கவில்லை. ஏற்கனவே தனியார் மருத்துவமனைகளில் இருந்து மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு வந்திருந்தவர்கள் தான் இறந்திருக்கிறார்கள்’’ என்று டீன் விளக்கமளித்துள்ளார்.