மதுரை அருகே வாலிபரை பழிக்குப்பழியாக அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
மதுரை அருகே இருக்கும் அனுப்பானடி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் கலையரசன்(19) .இவர் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்திருக்கிறது.கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கலையரசனின் நண்பர் பிரவீன்குமார் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த கொலைக்கும் செந்தில்குமாருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் செந்தில் குமார் மீது கலையரசன் ஆத்திரத்தில் இருந்திருக்கிறார்.
பிரவீன்குமார் கொலைக்கு பழிவாங்கும் நோக்கத்தோடு செந்தில்குமாரின் சகோதரர் சோப்பு செல்வகுமார் என்பவர் கடந்த மாதம் 13ம் தேதி கலையரசனின் கூட்டாளிகளால் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டு இருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
செல்வகுமார் வெட்டப்பட்டதால் அவரது சகோதரர் செந்தில்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கலையரசனை பழிவாங்க முடிவு செய்தனர். இந்த நிலையில் நேற்று அவர்கள் கலையரசனை அரிவாளால் வெட்டி இருக்கிறார்கள். இதில் காயமடைந்த கலையரசன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் இது சம்பந்தமாக தெப்பக்குளம் காவல் நிலையத்தில் கலையரசன் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறை செந்தில்குமார், அருண், கோபிநாத், மதியழகன், கருப்பசாமி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதில் செந்தில்குமார், அருண், கோபிநாத் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.