200 ஆண்டுகளுக்கு மேலாக பீடி, சிகரெட், மது போன்ற போதை பொருள்கள் விற்பனை செய்யப்படாமல் தமிழகத்தில் ஒரு கிராமம் இருப்பது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இருக்கிறது தேனூர் கிராமம். மதுரை நகரில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் இருக்கிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் 200 வருடங்களுக்கு மேலாக ஒரு நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பீடி, சிகரெட், மது போன்ற மக்கள் வாழ்வை சீரழிக்கும் எந்த போதை பொருட்களும் விற்பனை செய்ய அனுமதி கிடையாது. மீறி யாராவது விற்பனை செய்வது தெரிந்தால் கிராம நிர்வாகம் சார்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தமிழக அரசு சார்பாக நடத்தப்பட்டு வரும் அரசு மதுபான கடையும் இந்த கிராமத்தில் அனுமதிக்கப்படவில்லை. அந்த கிராமத்தில் இருக்கும் முதியவர்கள், இளைஞர்கள் என யாருக்கும் எந்தவொரு கெட்டபழக்கமும் இல்லை என்று கூறப்படுகிறது. 3 தலைமுறைக்கு மேலாக இந்த கட்டுப்பாடு தேனூர் கிராமத்தில் நிலவி வருகிறது. இந்த தகவல்களை தேனூர் கிராமத்தைச் சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா தெரிவித்தார்.
நேற்று உயர்நீதிமன்றத்தில் தமிழக பஞ்சாயத்துகளில் ஓட்டுனர் பதவி தொடர்பாக ஒரு வழக்கு நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கு ஏற்கனவே, அவர் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஆகும். இந்த வழக்கு விசாரணையின் போது தான் நீதிபதி ராஜா, தனது கிராமத்தைப் பற்றி பெருமையாக குறிப்பிட்டார்.
தமிழகத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் நூறு சதவீத மதுவிலக்கு கடைபிடிக்கப்பட்டு வருவது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.