காதல் திருமணம் செய்த வாலிபரின் தாயாரை கடத்தி தாக்கியதாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை செல்லூரில் இருக்கும் பூந்தமல்லி நகரை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மனைவி சந்திரா(48 ). இவர்களுக்கு பிரவீன் என்கிற மகன் இருக்கிறார். பிரவீன்,தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த ஹேமா என்கிற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இந்த காதலுக்கு இரு குடும்பத்திலும் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனால் அதையும் மீறி காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனால் இரு வீட்டிற்கும் முன்விரோதம் இருந்து வந்திருக்கிறது.
இந்த நிலையில் பிரவீன் மீது ஆத்திரத்தில் இருந்த பெண்வீட்டார் அவரை பழிவாங்க முடிவு செய்தனர். இதற்காக பிரவீன் வீட்டிற்கு ஹேமாவின் சகோதரர் மூன்று பேருடன் வந்துள்ளார். வீட்டில் இருந்த பிரவீனின் தாயார் சந்திராவை அவர்கள் காரில் கடத்தி சென்றனர். காரில் வைத்து சந்திராவை அவர்கள் சரமாரியாக தாக்கி இருக்கிறார்கள்.
இதில் அவர் பலத்த காயமடைந்திருக்கிறார். பின்னர் ஒரு இடத்தில் சந்திராவை அந்த கும்பல் இறக்கி விட்டு சென்றுள்ளது. இதுகுறித்து பிரவீனின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.