துபாயிலிருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 23 துப்பாக்கிகளை மதுரை விமான நிலையத்தில் அதிகாரிகள் கைப்பற்றினர்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் மதுரை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று வந்தது. அதிலிருந்து வந்த பயணிகளை பாதுகாப்பு அதிகாரிகள் வழக்கம்போல சோதனை செய்தனர். அப்போது அதில் 3 பயணிகள் கொண்டு வந்த பைகளை சோதனையிட்ட போது அதில் 23 துப்பாக்கிகள் இருந்தது தெரிய வந்தது. அவை அனைத்தும் துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் பயன்படுத்தப்படுபவை.
இதுகுறித்து விசாரணை செய்த அதிகாரிகளிடம் அவற்றை கொண்டு வந்தவர்கள் துப்பாக்கிச் சுடும் ஆணையத்தில் அவை பதிவு செய்யப்பட்டவை என்று கூறினர். ஆனால் அதற்கான எந்த ஆதாரங்களும் அவர்களிடம் இல்லை. இதனால் 23 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக துப்பாக்கிகள் குறித்த விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையின் முடிவில் அவை இந்திய துப்பாக்கிச் சுடும் கழகங்களில் பதிவு செய்யப்படவில்லை என்பது தெரிய வந்தது.
இதனடிப்படையில் விமான நிலைய அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கி இருக்கின்றனர். ஏதேனும் மிகப்பெரிய சதித்திட்டத்தை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா என்கிற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே தமிழகத்திற்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் உரிய ஆவணங்களின்றி விமான நிலையத்தில் பிடிபட்ட துப்பாக்கிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.