மதுரையில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே முசுண்டகிரி பட்டி கிராமத்தைச் சேர்ந்த தவமணி - கவிதா தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், மூன்றாவதாக பெரிய கருப்பு (வயது 13) என்ற மகனும் இருந்துள்ளனர். தற்போது கோடை விடுமுறை என்பதால், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நேரத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக, மின் கம்பத்தில் இருந்து அங்குள்ள ஊராட்சி மின்மோட்டார் அறைக்கு மின் ஒயர் கொண்டு செல்ல வயர் தொய்வு ஏற்படாமல் இருப்பதற்காக ஊன்றப்பட்ட கம்பியில் எதிர்பாராத விதமாக மின் கசிவு ஏற்பட்டுள்ளது.
வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை; காங். பிரமுகர் மரண வழக்கில் விழி பிதுங்கும் சிபிசிஐடி போலீஸ்
இதனை அறியாத சிறுவன் பெரிய கருப்பு விளையாடிக் கொண்டிருந்த போது தற்செயலாக கம்பியை தொட்ட போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளான். இதில் சுருண்டு விழுந்த சிறுவனை, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதனை கேட்டு உறவினர்கள் கதறி துடித்தனர்.
பின் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மேலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் அருகே விளையாடச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.