மதுரையில் ஆற்றுக்குள் தத்தளித்த தம்பியை காப்பாற்ற சென்ற அண்ணன் வெள்ளத்தில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்தவர் குமார். இவருக்கு பாலமுருகன்(10), ஆகாஷ் என்று இரு மகன்கள் உள்ளனர். இருவரும் அங்கிருக்கும் பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று ஞாயிற்று கிழமை, பள்ளி விடுமுறை நாள் என்பதால் நண்பர்களுடன் பாலமுருகனும் ஆகாஷும் விளையாட சென்றுள்ளனர். பின்னர் ஆரப்பாளையம் பகுதியில் இருக்கும் வைகை ஆற்றில் அனைவரும் குளிக்க சென்றனர்.
விவசாய தேவைக்காக வைகை அணையில் தற்போது நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளம் காரணமாக மதுரை கல் பாலம் வழியாக வாகனங்கள் செல்வதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில் நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச்சென்ற சிறுவன் ஆகாஷ் நீரில் மூழ்கி தத்தளித்துள்ளான். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பாலமுருகன் உடனடியாக ஆற்றுக்குள் குதித்து தம்பியை காப்பற்ற முயன்றிருக்கிறான்.
ஆகாஷை பத்திரமாக வெளியேற்றிய பாலமுருகன் எதிர்பாராத விதமாக ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டான். அண்ணன் வெள்ளத்தில் மூழ்குவதை கண்டு ஆகாஷ் கதறி துடித்தான். அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பாலமுருகனை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 20 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவன் பாலமுருகன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். அவனது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ஆற்றுக்குள் தத்தளித்த தம்பியை காப்பாற்ற சென்ற அண்ணன் வெள்ளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.