ஆழ்துளைக்கிணற்றில் சிக்கிய கோவில் காளை..! மதுரையில் பரபரப்பு..!

By Manikandan S R SFirst Published Nov 16, 2019, 3:58 PM IST
Highlights

மதுரை அருகே ஆழ்துளைக்கிணற்றுக்குள் காளை மாடு ஒன்று விழுந்த நிலையில் அப்பகுதி இளைஞர்களால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே இருக்கிறது சொக்கலிங்கபுரம் கிராமம்.  இங்கிருக்கும் விவசாய நிலத்தில் ஆழ்துளைக்கிணறு ஒன்று இருந்துள்ளது. விளைநிலத்தில் இருந்த ஆழ்துளைக்கிணறு மூடப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே அந்த பகுதியில் கோவில் காளை ஒன்று மேய்ந்து கொண்டிருந்துள்ளது. எதிர்பாராத விதமாக காளை மாடு ஆழ்துளைக்கிணற்றில் விழுந்துள்ளது.

அதன் இரண்டு பின்னங்கால்களும் ஆழ்துளைக்கிணற்றில் வசமாக சிக்கிக்கொண்டன. இதனால் காளை மாடு வெளியேற முடியாமல் வலியால் துடித்துள்ளது. காளை மாட்டின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் திரண்டு வந்தனர். ஆழ்துளைக்கிணற்றில் மாடு சிக்கியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக அதை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி, கயிறு மூலமாக மாட்டினை பத்திரமாக அப்பகுதி இளைஞர்கள் வெளியே எடுத்தனர். காளை மாட்டின் கால்களில் காயம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அதை சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

திருச்சியை சேர்ந்த சுர்ஜித் என்கிற இரண்டு வயது சிறுவன் கடந்த மாதம் ஆழ்துளைக்கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பயனற்று இருக்கும் ஆழ்துளைக்கிணறுகளை மூட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தநிலையில் வயலில் மேய்ந்து கொண்டிருந்த காளை மாடு ஒன்று ஆழ்துளைக்கிணற்றில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!