குளித்தலை அருகே ஆர்டி மலை ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் வலது கண் பார்வை இழந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாடுபிடி வீரர் சிவக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ஆர் டி மலையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு 61ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் 756 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. 362 மாடுபிடி வீரர்கள் களம் கண்டனர்.
இதில் வடசேரி அருகே பள்ளப்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் சிவகுமார் என்ற இளைஞர் முதல் சுற்றில் இரண்டு காளைகளை அடக்கி அடுத்த இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தார். இரண்டாம் சுற்று நிறைவடைந்த நிலையில் உடல் சோர்வு காரணமாக தடுப்பு கம்பி வேலியோரம் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்ட காளை ஒன்று அவரை வேகமாக முட்டியது. இதில் வலது கண் பார்வை முற்றிலும் பறிபோய் படுகாயம் அடைந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
undefined
பொங்கல் விடுமுறையை கொண்டாட தாத்தா வீட்டிற்கு சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று சிவகுமார் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 21 வயதான மாடுபிடி வீரர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரு வீரரும், திருச்சி சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்கச் சென்ற பார்வையாளர் ஒருவரும் காளை முட்டி உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒரு வீரர் காளை முட்டியதில் உயிரிழந்த சம்பவம் போட்டியாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.