யார் இந்த மரிய ஜெனிபர்: கன்னியாகுமரி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்!

By Manikanda PrabuFirst Published Feb 9, 2024, 2:04 PM IST
Highlights

கன்னியாகுமரி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மரிய ஜெனிபர் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் யார் என்ற விவரத்தை இங்கு காணலாம்

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2024 இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் ஏற்கனவே தொடங்கி விட்டது. தமிழகத்தை பொறுத்தவரை கூட்டணி, தொகுதி பங்கீடு என பேச்சுவார்த்தைகள் ஒருபுறமிருக்க, தேர்தல் அறிக்கை தயாரிப்பது, பிரசார வியூகங்கள், மக்களை சந்திப்பது என அரசியல் கட்சிகள் திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், அனைத்து கட்சிகளுக்கும் முன்னோடியாக, நாம் தமிழர் கட்சியின் ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகிறது. அண்மையில் சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், வரவிருக்கும் மக்களவை தேர்தலிலும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டி என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். பொதுக்குழு கூட்டத்திலேயே, தென் சென்னை தொகுதிக்கான வேட்பாளராக பேராசிரியர் தமிழ்செல்வி போட்டியிடுவார் என சீமான் அறிவித்தார்.

உத்தரகாண்ட் வன்முறையை வகுப்புவாதமாக்க வேண்டாம்: நைனிட்டால் மாவட்ட ஆட்சியர்!

அதன் தொடர்ச்சியாக, நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகளில் ஆலோசனை கூட்டத்தில், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 3 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை சீமான் அறிவித்தார். நெல்லையில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பா.சத்யா, தென்காசி தொகுதியில் மயிலை ராஜன், கன்னியாகுமரி தொகுதியில் மரிய ஜெனிபர் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை மொத்தமுள்ள தொகுதிகளில் 50 சதவீதம் ஆண்கள், 50 சதவீதம் பெண்கள் என்ற விகிதாசாரத்தில் வேட்பாளர்களை நிறுத்தும். எனவே, எதிர்வரவுள்ள மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 20 ஆண், 20 பெண் வேட்பாளர்களை அக்கட்சி நிறுத்தும் என தெரிகிறது.

அந்த வகையில், கன்னியாகுமரி தொகுதியில் மரிய ஜெனிபர் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்குள் நாகர்கோவில், பத்மநாபபுரம், குளச்சல், விளவங்கோடு, கன்னியாகுமரி, கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன. கன்னியாகுமரி தொகுதியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி பலமாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, இந்த முறை இந்தியா கூட்டணி சார்பில் மீண்டும் விஜய் வசந்த் எம்.பி.யே வேட்பாளராக அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடலாம் என தெரிகிறது. கன்னியாகுமரியை பொறுத்தவரை பாஜகவுக்கும் கணிசமான வாக்கு வங்கி உள்ளது. பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றால் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்பதால், அந்த தொகுதி தேர்தல் களம் அணல் பறக்கிறது.

தெருநாய்கள் தொல்லைக்கு தேசிய அளவிலான சிறப்பு குழு: நாடாளுமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. வலியுறுத்தல்!

இந்த பின்னணியில், கன்னியாகுமரி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மரிய ஜெனிபர் என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. 42 வயதாகும் மரிய ஜெனிபர் மாதவபுரத்தை சேர்ந்தவர். மீனவர் சமுதாயத்தை சேர்ந்த இவர், பொறியியல், எம்.பி.ஏ. பட்டதாரி. கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் இளங்கலை கணினி பொறியியலும், சென்னையில் உள்ள ICFAI கல்லூரியில் எம்.பி.ஏ., மார்கெட்டிங்கும் படித்துள்ளார்.

இவரது திருமணம் காதல் திருமணம் ஆகும். கணவர் பெயர் தீபக் சாலமன். கிறிஸ்தவ நாடார் சமூகத்தை சேர்ந்த தீபக் சாலமன், கன்னியாகுமரி, சுவாமிநாதபுரத்தை சேர்ந்தவர். தீபக் சாலமன் தற்போது துபாயில் பணியாற்றி வருகிறார். மரிய ஜெனிபர் - தீபக் சாலமன் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. குழந்தைகள் மூவரும் துபாயில் படித்து வருகின்றனர். சுமார் 17 ஆண்டுகால பணி அனுபவம், குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட வெளிநாடுகளில் மட்டும் 14 ஆண்டுகலாம் பணியாற்றியுள்ள மரிய ஜெனிபர், மாதந்தோறும் லட்சக்கணக்கில் ஊதியம் பெற்று வந்தவர்.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில், நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளில் இருந்துள்ள மரிய ஜெனிபர், கன்னியாகுமரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு தேர்தல் களத்துக்கு வந்துள்ளார்.

click me!