கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடினால் கொல்ல முயற்சிப்பீர்களா? சீமான் ஆவேசம்

By Velmurugan sFirst Published Mar 13, 2024, 6:33 PM IST
Highlights

கனிமவள கொள்ளைக்கு எதிராக தொடர்ந்து போராடும் நாம் தமிழர் உறுப்பினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டத்திற்குப் புறம்பாக இயங்கி வரும் 10க்கும் மேற்பட்ட குவாரிகளில் இருந்து மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரின் வளங்கள் சூறையாடப்பட்டு, கேரளாவின் காசர்கோடு - திருவனந்தபுரம் தொடர்வண்டி போக்குவரத்துத் திட்டத்திற்கும், விழிஞ்சம் துறைமுகத் திட்டத்திற்கும், கேரளா முழுவதிலும் உள்ள இதரக் கட்டுமானப் பணிகளுக்கும் கொண்டுசெல்லப்படுகின்றன. விதிகளை மீறி நடந்துவரும் இவ்வளக்கொள்ளையை எதிர்த்துக் காவல்துறையில் புகாரளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததன் மூலம் ஆளும் திமுக அரசின் வளக்கொள்ளையர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டையும், கொடுங்கோல் செயற்பாட்டையும் உணர்ந்துகொள்ளலாம்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 2 நாட்களில் வேட்பாளர் பட்டியல் - பாஜக துணைத்தலைவர்

சட்டத்திற்குப் புறம்பாக இயக்கப்படும் வளக்கொள்ளையினரது வாகனங்களை நாம் தமிழர் கட்சியினரே தொடர்ச்சியாகச் சிறைப்பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்து வருகின்றனர். காவல்துறை செய்ய வேண்டிய அவ்வேலைகளைக் கடும் அச்சுறுத்தல்களுக்கு நடுவே நாம் தமிழர் கட்சியினர் செய்து வந்த நிலையிலும், அதுதொடர்பாக உரிய நடவடிக்கையோ, அச்சுறுத்தலுக்கு உள்ளாகிய நாம் தமிழர் கட்சியினருக்கு உரியப் பாதுகாப்போ வழங்க காவல்துறை முன்வராதது வெட்கித் தலைகுனிய வேண்டிய இழிநிலையாகும். தம்பி சீலன் அவர்கள் வளக்கொள்ளைக்கு எதிராகத் தொடர்ந்து செயலாற்றிய காரணத்தால் கொலைமிரட்டல்களும், அச்சுறுத்தல்களும் அவருக்கு விடுக்கப்பட்ட நிலையில், காவல்நிலையத்தில் புகாரளித்துவிட்டு திரும்பும் வழியிலேயே அவர் மீது கொலைமுயற்சிகள் தொடுக்கப்பட்டிருப்பது பேரவலமாகும்.

மண்ணின் வளங்களைப் பேணிக் காக்க வேண்டும் எனும் உயரிய நோக்கத்தோடு மக்கள் பணியில் ஈடுபடும் தன் நாட்டின் குடிமக்களைக்கூடக் காப்பாற்ற வக்கற்று நிற்பதுதான் திராவிட மாடலா? எனும் கேள்விதான் இச்சமயத்தில் எழுகிறது. ஏற்கனவே, நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றியத் தலைவர் தம்பி சேவியர் குமார் அவர்கள் திமுகவின் குண்டர்களால் படுகொலைசெய்யப்பட்டு, அக்கொடுந்துயரிலிருந்து மீளாத நிலையில் தற்போது நடைபெற்றுள்ள இக்கோர நிகழ்வு, அரசதிகாரம் மீதான எளிய மக்களின் நம்பிக்கையை முற்றாகத் தகர்க்கிறது.

குடும்பத்தை பார்க்க ஆசை ஆசையாக ரயில் வந்த ராணுவ வீரர்; தவறி விழுந்து பரிதாப பலி

ஆகவே, இனியும் காலந்தாழ்த்தாமல் தம்பி சீலன் மீது கொலை முயற்சியில் ஈடுபட்ட கொடுங்கோலர்களை விரைந்து கைதுசெய்து, தம்பி சீலன் மற்றும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமெனவும், குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளவேட்டையை முழுமையாகத் தடுத்து நிறுத்தி, வளக் கொள்ளையர்களைக் கைதுசெய்து, சிறைப்படுத்த வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!