கன்னியாகுமரியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து எஞ்சிய 27 மாவட்டங்களில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித்தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. பிரதான கட்சிகளான திமுகவிற்கும் அதிமுகவிற்கும் கடும் இழுபறி நீடித்து வந்த நிலையில் தற்போது திமுக முன்னிலையில் இருக்கிறது.
515 இடங்களுக்கான மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் திமுக 268 இடங்களிலும் அதிமுக 239 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. 5067 பதவிகளுக்கான ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக 2143 இடங்களிலும் திமுக 2303 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிற கட்சிகளும் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. உள்ளாட்சித்தேர்தலில் தினகரனின் அமமுக மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்து போட்டியிட்டன.
அமமுக 464 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. சில இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. ஆனால் நாம் தமிழர் கட்சி நேற்று முழுவதும் ஒரு இடத்திலும் முன்னிலையில் வராமல் இருந்தது. இந்தநிலையில் தற்போது அக்கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 11வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சுனில் என்பவர் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் வெளியான நிலையில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.