அரபிக் கடலில் ஜூன்-1 முதல் மீன்பிடி தடைக்காலம்! மீனவர்கள் 31ம் தேதிக்குள் கரைதிரும்ப உத்தரவு!

By Dinesh TG  |  First Published May 24, 2023, 12:38 PM IST

வங்கக்கடலைத் தொடர்ந்து அரபிக் கடல் பகுதிகளில் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்க உள்ளது. ஆழ்கடலில் தங்கியிருக்கும் மீனவர்கள் வரும் 31ம் தேதிக்குள் கரை திரும்ப மாவட்ட ஆட்சியர் ஶ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.
 


தமிழகத்தின் வங்கக்கடலில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு விதிக்கப்பட்ட மீன்பிடி தடைக்காலம், 61 நாட்கள் வரும் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. அதே வேளையில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தேங்காய்ப்பட்டிணம், கேரளா உட்பட குஜராத் வரை உள்ள அரபிக் கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலம் வரும் ஜூன் ஒன்றாம் தேதி தொடங்குவதால், அன்றிலிருந்து 61 நாட்களுக்கு விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடை காலம் தொடங்க உள்ளது.

எனவே குளச்சல், தேங்காய்ப்பட்டிணம் ஆகிய மீன் பிடி துறைமுகங்களில் இருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் அதிகபட்சம் 15 நாட்கள் வரை கடலில் தங்கி மீன் பிடிப்பது வழக்கம். எனவே இந்த மீனவர்கள் ஆழ்கடலில் எங்கிருந்தாலும் வரும் 31 ஆம் தேதிக்குள் குமரி மாவட்டம் மீன்பிடி துறைமுகங்களில் வந்து கரை சேர்ந்து விசைப்படகுகளை சம்பந்தப்பட்ட மீன்பிடித் துறைமுகத்தில் ஒதுக்கிக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார். வரும் 31 ஆம் தேதிக்குள் கரை வந்து சேராத விசைப்படகு மீனவர்கள் மீது தமிழ்நாடு கடல் மீன் பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983 மற்றும் 2020 சட்ட விதிகளின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் ஶ்ரீதர் எச்சரித்துள்ளார்.


 

Latest Videos

click me!