குடும்பத்துடன் தற்கொலை செய்ய கூரியரில் விஷம் வாங்கிய குமரி தொழில் அதிபர்..!

By Asianet TamilFirst Published May 21, 2019, 11:07 AM IST
Highlights

நாகர்கோவிலில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட தொழில் அதிபர் குஜராத்தில் இருந்து கூரியரில் விஷம் வாங்கிய தகவல் வெளியாகியுள்ளது.

நாகர்கோவிலில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட தொழில் அதிபர் குஜராத்தில் இருந்து கூரியரில் விஷம் வாங்கிய தகவல் வெளியாகியுள்ளது.

நாகர்கோவில் வடசேரியைச் சேர்ந்த தொழில் அதிபர் சுப்பிரமணியன் (வயது 52). இவருடைய மனைவி ஹேமா (48). மகள் ஷிவானி (20). தாயார் ருக்மணி (72). ஷிவானி ஓமியோபதி மருத்துவம் படித்து வந்தார். சுப்பிரமணியனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மகளின் படிப்புக்கும் அதிகம் செலவானது. இதை ஈடுகட்ட கடன் வாங்கியுள்ளார்.  கடன் தொல்லை அதிகரித்ததால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுப்பிரமணியன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார். 

 சுப்பிரமணியனின் தற்கொலைக்கு கந்துவட்டி மிரட்டல் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவரது செல்போனை பழுதுபார்த்து அதில் வந்த அழைப்புகள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். சுப்ரமணியன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, சென்னையில் உள்ள நண்பர் ஒருவரிடம் ரூ.2 கோடி கடன் கேட்டுள்ளார். அது கிடைத்தால், தன்னால் கடனை அடைத்து விட முடியும் என நம்பியுள்ளார். ஆனால் அந்த நண்பர் மழுப்பலான பதிலை தெரிவித்ததால், கடைசி நம்பிக்கையும் கைவிட்ட சோகத்தில் சுப்பிரமணியன் குடும்பத்துடன் தற்கொலை முடிவு எடுத்த உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது. 

குளிர்பானத்தில் விஷமருந்தை கலந்து குடித்து அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்துள்ளார்.  இந்நிலையில் அவர்கள் அருந்திய விஷப்பவுடர் புதியதாக இருப்பது உடற்கூராய்வில் தெரியவந்தது. இதையடுத்து அது என்ன விஷப்பவுடர் என்று அறிய அவர்களின் உடற்பாகங்கள் நெல்லை மாவட்ட ரசாயன பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுக்குப் பின்னர், அது என்ன வகையான பவுடர் என்பது தெரியவரும்.

 

இதற்கிடையே அந்த விஷப்பவுடரை சுப்பிரமணியன் குஜராத்தில் இருந்து கூரியரில் பெற்றுக்கொண்ட விவரம் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அந்தக் கூரியர் கவரை போலீசார் கைப்பற்றி அதில் இருந்த குஜராத் முகவரியைப் பெற்றுள்ளனர். அதை சுப்பிரமணியனுக்கு அனுப்பி வைத்தது யார் என்று போலீசார் விசாரிக்கின்றனர். இதற்கிடையே குமரியில் கந்துவட்டி அதிகரித்துள்ளதாக மாவட்ட கலெக்டருக்கு மக்கள் புகார் அளித்துள்ளனர். சுப்பிரமணியன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

click me!