நித்திக்கு போட்டியாக வந்த 'ஸ்நேக் மதர்'..! அலேக்காக தூக்கி கம்பி எண்ண வைத்த காவல்துறை..!

By Manikandan S R SFirst Published Dec 22, 2019, 12:19 PM IST
Highlights

உயிருள்ள பாம்பை வைத்து அருள்வாக்கு சொல்வதாக வித்தை காட்டி பணம் சம்பாதித்த பெண் சாமியாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தைச் சேர்ந்தவர் கபிலா. பட்டதாரியான இவர் கடந்த 1999 ம் ஆண்டு அப்பகுதியில் வடபத்தரகாளியன் கோவிலை அமைத்துள்ளார். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் குறிசொல்லி சாமி ஆடுவார் என அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். முதலில் சிறிய அளவில் இருந்த கோவில் நாளடைவில் பக்தர்களின் அதிக வருகையால் பெரியதாக கட்டப்பட்டது. பக்தர்களின் கூட்டத்தை அதிகரிப்பதற்காக கபிலா சிறப்பு பூஜைகள் பல செய்து வந்திருக்கிறார்.

அதன்படி சில நாட்களுக்கு முன்னர் சர்ப்ப சாந்தி பூஜை என்கிற பெயரில் நல்ல பாம்புகளை பாம்பாட்டி ஒருவர் மூலம் கொண்டு வரச்செய்து பக்தர்களிடம் அருள்வாக்கு கூறுவதாக வித்தை காட்டியிருக்கிறார். பாம்புக்கு பாலபிஷேகம் என்கிற பெயரில் குடம்குடமாக ஊற்றி, அதை மூச்சு திணற செய்துள்ளார். பின் தனக்கு அம்மன் போல வேடமிட்டுக்கொண்ட கபிலா, ஒரு கையில் சூலமும், பாம்பை கழுத்தில் சுற்றவிட்டு இன்னோரு கையில் அதன் தலையை பிடித்து கொண்டு அருள் வந்தது போல ஆடியிருக்கிறார்.

இதுதொடர்பான காணொளியை வடபத்ரகாளியம்மன் என்கிற பெயரில் இயங்கும் யூ டியூப் சானலில் பதிவேற்றுமும் செய்துள்ளார் கபிலா. அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. பாம்புகளை வீட்டில் வளர்ப்பதும், வித்தை காட்டுவது போன்றவை சட்டப்படி குற்றமாக இருக்கும் நிலையில் கபிலாவின் இந்த செயல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. இதையடுத்து வனவிலங்குகள் பாதுகாப்பு பிரிவின் கீழ் அவரை வனத்துறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

click me!