காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாடகை பாக்கி தொடர்ந்து அதிகமானதாலும், வீட்டை காலி செய்ய மறுத்ததாலும் வீட்டின் உரிமையாளர் வீட்டுக்கு செல்லும் பாதையை துண்டித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காஞ்சிபுரம் மாவட்டம் விளக்கடி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் ஆப்செட் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் அவருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள வானவில் நகர் பகுதியில் சொந்தமாக வீடு உள்ளது. இங்கு மேல் மாடியில் வேணுகோபால் என்பவர் தனது மனைவி லீலா, தம்பி பாபு மற்றும் மகள் மகாலட்சுமி, அவரது இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். வேணுகோபால் திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வருகிறார்.
பாபு முறையாக வாடகை செலுத்தாததால் இவரை குடியிருப்பில் இருந்து காலி செய்ய வீட்டு உரிமையாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதனிடையில் பாபு வழக்கறிஞர் உதவியுடன் வீட்டின் உரிமையாளரிடம் பேசி கால அவகாசம் வாங்கிய நிலையில் கடந்த ஆறு மாத காலமாக வாடகை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. பலமுறை கேட்டும் வீடு காலி செய்ய மறுத்த நிலையில், இன்று காலை 6 மணியளவில் கட்டுமான உதவியாளர் உள்பட 10 நபர்களுடன் வீட்டின் மாடிக்கு செல்லும் படிக்கட்டுகளை இடித்து இணைப்பை துண்டித்துள்ளார்.
undefined
TTR: விரைவு ரயிலில் ஒரிஜினல் டிக்கெட் பரிசோதகரிடம் டிக்கெட் கேட்டு வசமாக மாட்டிய போலி TTR
இதைக் கண்டு அதிர்ச்சடைந்த குடியிருப்பு வாசிகள் காவல்துறையின் அவசர உதவியான நூறுக்கு அழைத்து புகார் தெரிவித்ததின் பேரில், காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வீட்டில் உள்ள நபர்களை பாதுகாப்பாக அழைத்து வர காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். வீட்டை விட்டு வெளியேற குடும்பத்தினர் மறுத்து வருவதால் காவல்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இது குறித்து குடியிருப்பு வாசிகள் கூறுகையில், பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளியை கவனிக்க அதிக செலவழித்த நிலையில் விரைவாக பாக்கி தொகையை தந்து விடுவதாக கூறிய நிலையில் இது போன்ற அராஜக செயலில் ஈடுபட்டு தற்போது குடிநீர் கூட குடிக்க இயலாத நிலையில் வீட்டில் முடங்கி கிடப்பதாகவும், பள்ளி செல்லும் மாணவர்கள் கூட பள்ளிக்கு செல்லாமல் காத்துக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.