காஞ்சிபுரத்தில் இருந்து பிரிந்தது செங்கல்பட்டு..! தமிழகத்தின் 37வது மாவட்டமாக உதயம்..!

By Manikandan S R SFirst Published Nov 29, 2019, 1:20 PM IST
Highlights

காஞ்சிபுரத்தில் இருந்து பிரிந்த செங்கல்பட்டு மாவட்டத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. முதல்வர் பழனிசாமி தமிழகத்தின் 37 வது மாவட்டமான செங்கல்பட்டின் நிர்வாக பணிகளை தொடங்கி வைத்தார்.

நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 2 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. அதே போல திருநெல்வேலி மாவட்டமும் இரண்டாக பிரிக்கப்பட்டு திருநெல்வேலி, தென்காசி என உருவாக்கப்பட்டது.

புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியிடப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் மாவட்டங்களில் எந்தெந்த தாலுகாக்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு புதிய மாவட்டங்களுக்கான ஆட்சியர்களும் காவல்துறை கண்காணிப்பாளர்களும் அறிவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில்  மாவட்ட தொடக்க விழா முதல்வர் தலைமையில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்று வருகிறது.

அதன்படி காஞ்சிபுரத்தில் இருந்து பிரிந்த செங்கல்பட்டு மாவட்டத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. முதல்வர் பழனிசாமி தமிழகத்தின் 37 வது மாவட்டமான செங்கல்பட்டின் நிர்வாக பணிகளை தொடங்கி வைத்தார். 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 ஆயிரம் பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்ற இருக்கிறார். விழாவில் துணைமுதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளும்,  3 வருவாய் கோட்டங்களும், 8 தாலுகாக்களும் இடம்பெற்றுள்ளன. ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியும், காஞ்சிபுரம் மக்களவை தொகுதியின் பாதி இடங்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. முன்னதாக தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

click me!