8 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கபோகும் கனமழை..! வானிலை மையம் எச்சரிக்கை..!

By Manikandan S R S  |  First Published Nov 27, 2019, 4:01 PM IST

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.


தமிழகத்தில் கடந்த மாதம் 16 ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதுமுதல் பல்வேறு மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வந்தது. மாநிலத்தின் பிரதான அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தனர். சென்னையில் பெய்த கனமழையால் நிலத்தடி நீர்மட்டம் உயரத்தொடங்கியது.

Latest Videos

undefined

இதனிடையே வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் உருவான புயல்களால் தமிழகத்தின் ஈரப்பதம் வெகுவாக ஈர்க்கப்பட்டு மழையின் தீவிரம் குறைந்தது. இந்த நிலையில் வெப்பசலனம் மற்றும் காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது. இது மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி அடுத்து வரும் நாட்களில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குமரிக்கடல் பகுதியில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதுடன் பலத்த சூறைக்காற்றும் வீசுகிறது. இதனால் கரையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்துள்ளன. இதே போல தனுஷ்கோடியின் அரிசல்முனை பகுதியில் பெரும்பாலான இடங்கள் கடல் சீற்றத்தால் அரிக்கப்பட்டிருக்கும் நிலையில் அங்கு சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

click me!