
தமிழகத்தில் தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொலை சம்பவங்கள் குறைந்திருந்த நிலையில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி வசூல்ராஜா. இவர் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டம் திருக்காலிமேட்டில் ரவுடி வசூல்ராஜா 5 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனர். பின்னர் அவைர சுற்றி வளைத்த அந்த கும்பல் தலை, கை, கால்கள் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வசூல்ராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு தான் இவர் சிறையில் இருந்து வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பட்டப்பகலில் மக்கள் நடமாடும் பகுதியில் பிரபல ரவுடி ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
யார் இந்த வசூல்ராஜா?
வசூல்ராஜா சிறுசிறு குற்றங்களில் ஈடுபட்டு வந்தள்ளார். இவர் 2009-ஆம் ஆண்டு ஜோசப் மற்றும் அவரது நண்பர் இருவரை கொலை செய்தார். இதனைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு காஞ்சிபுரம் பொய்யாக்குளம் பகுதி சேர்ந்த, ஆட்டோ ராஜா என்பவரையும் கொலை செய்ததை அடுத்து ரவுடிகள் மத்தியில் பிரபலமானார். பின்னர் வட்டிக்கு விடும் தொழிலில் ராஜா ஈடுபட்டு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனது பெயரை வசூல்ராஜா என மாற்றிக் கொண்டுள்ளார். வசூல்ராஜா என்ற பெயருக்கு ஏற்றார் போல், கடனை வசூல் செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக எந்த குற்றச்செயல்களில் ஈடுபடாமல் திருந்தி வாழ நினைத்த நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.