அரக்கோணத்தில் பரம்பரை வியாதியான மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்த வங்கி மேலாளர் ஒருவர் வீட்டில் யாரும் இல்லாத சூழலில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்தவர் கிஷோர்(வயது 40). இவர் அரக்கோணம் யூனியன் வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி தீபா (35). காஞ்சிபுரம் ஐஓபி வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றுகிறார். இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கீழ்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜவகர் நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த மே 1ம் தேதி கிஷோரின் தங்கைக்கு கேரளாவில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு செல்லும் போது தனது மகன், மகளை பள்ளி கோடை விடுமுறைக்காக கேரளாவில் விட்டுவிட்டு கிஷோரும், அவரது மனைவியும் மட்டும் அரக்கோணம் வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் வழக்கம்போல் வீட்டில் இருந்து மனைவி தீபாவை அழைத்துக் கொண்டு அரக்கோணம் தாலுகா ஆபிஸ் பஸ் நிறுத்தத்திற்கு அழைத்து வந்து அங்கிருந்து காஞ்சிபுரம் செல்லும் பேருந்தில் தனது மனைவியை சிரித்த முகத்துடன் ஏற்றிவிட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
தமிழ் தவிர்த்து அனைத்து பாடங்களிலும் சதம் விளாசிய மாணவிகளுக்கு குவியும் பாராட்டு
இதனைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு அவரது வீட்டில் துணிகளை துவைப்பதற்காக பணிப்பெண் வந்துள்ளார். அவரிடம் இருந்த சாவியை வைத்து வீட்டின் கதவை திறந்த போது ஹாலில் உள்ள மின்விசிறியில் கிஷோர் தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அப்பெண் அலறியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். இதுகுறித்து அரக்கோணம் டவுன் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சப் இன்ஸ்பெக்டர் பசலைராஜ் மற்றும் போலீசார் அங்கு வந்து தூக்கு கயிற்றில் இருந்து கிஷோர் உடலை மீட்டனர். இதற்கிடையே காஞ்சிபுரம் ஐஓபி வங்கியில் உதவி மேலாளராக பணிபுரியும் மனைவி தீபாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வங்கி ஊழியர்களுடன் காரில் கதறி அழுதபடி வந்தார். வீட்டில் பிணமாக கிடந்த கணவர் உடலை பார்த்ததும் மயங்கி விழுந்தவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி ஆறுதல் கூறினர்.
அதைத்தொடர்ந்து தீபா அரக்கோணம் டவுன் போலீசாரிடம் கூறியதாவது, இன்று என்னுடைய கணவருக்கு பிறந்தநாள். அவரது பிறந்த நாளில் தனது உயிரை மாய்த்துக் கொண்டது எனக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்களது குடும்பத்தில் பரம்பரை வியாதியாக மன அழுத்தம் உள்ளது. இந்த மன அழுத்தத்தால் ஏற்கனவே ஒரு முறை கிஷோர் தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். இது போன்ற விபரீத எண்ணங்களில் ஈடுபடாமல் இருப்பதற்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார்.
வீட்டில் பிள்ளைகள் இல்லாத நிலையில் இன்று என்னை வழக்கம்போல் வங்கிக்கு பேருந்தில் அனுப்பிவிட்டு வந்தவர் தனிமையில் மன அழுத்தம் காரணமாக வீட்டில் தூக்கு மாட்டி இறந்திருக்கலாம் என்று கண்ணீர்மல்க தெரிவித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கிஷோர் உடலை பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சொந்த ஊரான கேரள மாநிலம் வயநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரம்பரை வியாதியான மன அழுத்தத்தால் வங்கி மேலாளர் ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மட்டுமின்றி அரக்கோணம் மக்களிடையே ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.