ஈரோடு கிழக்கு தேர்தல் 2025 முடிவுகள்...ஓட்டுக்களை அள்ளப் போவது யார்? தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு

Published : Feb 07, 2025, 07:49 PM ISTUpdated : Feb 08, 2025, 03:30 PM IST
ஈரோடு கிழக்கு தேர்தல் 2025 முடிவுகள்...ஓட்டுக்களை அள்ளப் போவது யார்? தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு

சுருக்கம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 2025 முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், இந்த தொகுதியை கைப்பற்ற போவது யார்? மக்களின் ஆதரவு யாருக்கு என்ற கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ள தமிழக அரசியல் களமும், மக்களும் காத்திருக்கிறார்கள்.  

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் முடிவுகள் நாளை (பிப்ரவரி 8,2025) வெளியாக போகிறது. இது வழக்கமான தேர்தல்களை போல் இல்லை என்பதால் வெற்றி யாருக்கு என்பதை தாண்டி, ஓட்டுக்களை அதிகம் பெற போவது யார் என்ற கேள்வி தான் தமிழக அரசியல் களத்தை பரபரக்க வைத்துள்ளது. இது தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளை மட்டுமல்ல போட்டியிடாத கட்சிகளையும் உற்று கனிக்க வைத்துள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ., ஆகவும் இருந்த ஈ.வி.கே.இளங்கோவன் 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்ததால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 5ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 44 பேர் சுயேட்சைகள். பிரதான கட்சிகள் என்று பார்த்தால் ஆளும் கட்சியான திமுக.,வும், சீமானின் நாம் தமிழர் கட்சியும் தான். இந்த இடைத்தேர்தலை திமுக தவறாக பயன்படுத்தும் என பகிரங்கமாக குற்றம்சாட்டி அதிமுக, பாஜக, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகள் இந்த தேர்தலை புறக்கப்பதாக அறிவித்தன.

திமுக., கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி வழக்கமாக காங்கிரஸ் கட்சிக்கு தான் ஒதுக்கப்படும். ஆனால் இந்த முறை காங்கிரசிற்கு வாய்ப்பு தராமல் திமுக.,வே வேட்பாளரை நிறுத்தி உள்ளது. ஆளும் கட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சிகள் கூறி வருவதாகும், தமிழகத்தில் திமுக.,வின் ஆட்சி காலம் நிறைவடைவதற்கு இன்னும் ஓராண்டுகள் மட்டுமே மீதம் இருப்பதாலும், மக்களிடம் திமுக.,விற்கு இருக்கும் செல்வாக்கு குறையவில்லை என்பதை நிரூபித்து காட்ட வேண்டிய கட்டாயம் திமுக.,விற்கு ஏற்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை தங்கள் பலத்தை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாக திமுக எடுத்துக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

காரணம் எதுவாக இருந்தாலும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் முடிவடைந்து, நாளை ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இடைத்தேர்தல் என்றால் வெற்றி எப்போதும் ஆளும் கட்சிக்கு தான் என்பது தமிழக தேர்தல் வரலாற்றில் எழுதப்படாத ஒன்று என்பது அனைவருக்கும் தெரியும். பெரிய கட்சிகள் அனைத்தும் பின்வாங்கிய நிலையில் நாம் தமிழர் கட்சி மட்டுமே திமுக.,வை எதிர்த்து போட்டியிட்டுள்ளது. அதனால் இருவரில் திமுக.,விற்கான வெற்றி என்பது அனைவருக்கும் தெரிந்தாலும் ஓட்டுக்களை அதிகம் பெற போவது யார் என்பது தற்போதைய மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

சமீபத்தில் காலங்களில் யாரும் பேசாத அளவிற்கு தந்தை பெரியாரை மிக கடுமையாக விமர்சித்தவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.  அவரது கட்சிக்கு தந்தை பெரியார் பிறந்த மண்ணான ஈரோடு மக்களின் ஆதரவு எப்படி இருக்கும்? என்ற கேள்வி முன் வைக்கப்பட்டாலும், வேறு கட்சிகள் யாரும் போட்டியிடாததால் திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் தானாக நாம் தமிழர் கட்சிக்கு விழுந்திருக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை சீமானின் இத்தகைய கடுமையான பேச்சுக்களையும் மீது நாம் தமிழர் கட்சிக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்திருந்தால் அது நாம் தமிழர் கட்சிக்கு மிகப் பெரிய பலம் என்பதை விட, ஆளும் கட்சியான திமுக., பலம் இழந்து உள்ளது என்பதையே காட்டும்.

அதே போல் அதிமுக, பாஜக ஓட்டுக்கள் யாருக்கு விழுந்திருக்கும் என்ற கேள்வியும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நோட்டாவிற்கு அதிகமான ஓட்டு விழுந்துள்ளதாக அதிமுக தரப்பில் சொல்லப்பட்டு வருவதும் சற்று யோசிக்க வைத்துள்ளது. நோட்டா, நாம் தமிழர் கட்சி, சுயேட்சை இவர்களில் யாருக்கு அதிகமாக ஓட்டு பதிவானாலும் அது திமுக.,விற்கு தமிழக அரசியல் களத்தில் நிச்சயம் அழுத்தத்தை தரும். இதை எதிர்கொள்ள வேண்டிய கட்டாய நிலையில் உள்ளதால், திமுக.,விற்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி மட்டுமல்ல ஓட்டு சதவீதமும் மிக மிக முக்கியமானதாக உள்ளது. ஆனால் ஈரோடு கிழக்கு மக்களின் ஆதரவு  யாருக்கு என்பதை தெரிந்து கொள்ள நாளை பிற்பகல் முடிவுகள் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஈரோடு மூதாட்டி கொ*லை வழக்கில் திடீர் திருப்பம்! வெளியான அதிர்ச்சி காரணம்! சிக்கிய நபர்?
ஒரு மாதத்திற்கு பின் தோண்டி எடுக்கப்பட்ட சடலத்தின் பின்னணி! விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!