என்.எல்.சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதைக் கண்டித்து கடலூர் மாவட்டத்தில் நாளை பாமக சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பேருந்துகள் கிடைக்காமல் அவதி அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர்ந்து பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், என்எல்சி நிர்வாகம் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை (11ம் தேதி) முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். கடலூர் மாவட்ட மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு என்.எல்.சி.க்கு எதிரான இந்த போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
நாகையில் அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு? உறவினர்கள் வாக்குவாதம்
முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு இரவு நேரங்களில் பணிமனைகள் அல்லாமல் ஆங்காங்கே உள்ள கிராமங்களுக்கு கடைசி சேவை வழங்கும் பேருந்துகளை தற்போதே பணிமனைகளுக்கு திரும்புமாறு போக்குவரத்துக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. பேருந்துகளை கிராமங்களில் நிறுத்தியிருக்கும் பட்சத்தில் அவற்றை சேதப்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதால் இரவில் பணிமனைக்கு திரும்புமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பணி முடிந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் போதிய பேருந்துகள் இல்லாமல் அவதியடைந்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சனிக்கிழமை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் திறந்திருக்கலாம். முழு அடைப்பு என்ற பெயரில் கடைகளை அடைக்கக் கோரி வியாபாரிகளை யாரும் வற்புறுத்தக் கூடாது. திறந்திருக்கும் கடைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.