கடலூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். நேற்று முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்த நிலையில், இன்று இருவரை அதிரடியாக காவல்துறை கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் சேகர். இவர் கடலூர் மாவட்டம் சிவனார்புரம் கிராமத்தில் நாட்டு பட்டாசுகள் தயாரிக்கும் கொட்டகையை நடத்தி வருகிறார். மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 9 பேர் சிக்கினார்கள்.பட்டாசு கொட்டகை முற்றிலுமாக எரிந்த நிலையில் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் பணியில் இருந்த மல்லிகா என்பவர் உயிரிழந்தார். தீ விபத்தினால் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அனைவரும் 80 விழுக்காடு தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த தீ விபத்து தொடர்பாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் நேரில் விசாரணை மேற்கொண்டனர். ரெட்டிசாவடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, கடலூர் மாவட்டம் மற்றும் வட்டம் மதலப்பட்டு மதுரா, சிவனார்புரம் கிராமத்தில் இயங்கிவந்த தனியார் வெடிபொருள் தயாரிக்கும் ஆலையில் இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தைச் சேர்ந்த திருமதி.மல்லிகா, க/பெ. பூபாலன் (வயது60) என்பவர் உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இதையும் படிங்க..பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வேலைவாய்ப்பு.. 281 காலியிடங்கள் - விண்ணப்பிப்பது எப்படி.?
இவ்விபத்தில் கடுமையான மற்றும் லேசான தீக்காயங்களுடன் கடலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருமதி.சுமதி க/பெ.ஐயனார் (வயது 45), திருமதி.பிருந்தாதேவி, க/பெ.இளங்கோவன் (வயது 35), செல்வி.லட்சுமி, த/பெ.செல்வம் (வயது 24), செல்வி.செவ்வந்தி, த/பெ.செல்வம் (வயது19), மற்றும் செல்வி.அம்பிகா, த/பெ.இராஜேந்திரன் (வயது18), ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 3 இலட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்' என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்களான சேகர்(55), கோசலா(50) ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..Explained: தமிழகத்தில் வட இந்தியர்களை குறி வைத்து தாக்கும் தமிழர்கள்.. உண்மையா.? நடப்பது என்ன.? ஓர் அலசல்