என்எல்சி விவசாய நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபடும் நிலையில், கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் கத்தாழை மற்றும் மேல் வலையமாதேவி கிராமத்தில் விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் நெல் பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில் புதன்கிழமை என்.எல்.சி நிறுவனம் ராட்சத இயந்திரங்களைக் கொண்டு விவசாய நிலத்தில் நன்கு விளைந்த பயிர்களை அழித்து கால்வாய் அமைக்கும் பணியைத் தொடங்கியது.
அப்போது அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் விளைநிலங்களை அழித்த அதிகாரிகளிடத்தில் வாக்குவாதம் செய்து விரட்டி அடித்தனர். இதனால் என்எல்சி நிறுவனம் காவல்துறை பாதுகாப்புடன் விளை நிலங்களைக் கையகப்படுத்தும் பணியில் இறங்கியது. இதனால், கத்தாழை மற்றும் வளையமாதேவி கிராமங்களில் நில உரிமையாளர்கள் போராட்டத்தைத் தொடங்கினர்.
இதனிடையே, இந்தப் பிரச்சினை குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மட்டுமே என்.எல்.சி. தற்போது பணிகளை மேற்கொண்டு வருகிறது என விளக்கம் அளித்துள்ளார்.
கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் பயிரிட வேண்டாம் என்று ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தோம் எனவும் இருந்தும் அவர்கள் பயிரிட்டு அழிந்த பயிருக்கு உயர் இழப்பீடு வழங்கப்படும் எனவும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் அருகே என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சேத்தியாதோப்பு கடைவீதி பகுதியில் நடந்த போராட்டத்தில் மர்ம நபர்கள் பேருந்து மீது கல் வீசித் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், சாலையில் டயரை போட்டு தீ வைத்துள்ளனர். நல்வாய்ப்பாக லேசாக எரிந்த டயர் உடனடியாக அணைக்கப்பட்டது.