ஆனைமலையில் அதிர்ச்சி..! இரு புலிகள் மர்ம மரணம்..!

By Manikandan S R SFirst Published Apr 11, 2020, 11:22 AM IST
Highlights

இரண்டு புலிகளின் வயிற்றிலும் காட்டுப் பன்றியின் இறைச்சி இருப்பதால் காட்டு பன்றியை கொன்று அதன் இறைச்சியில் விஷம் வைத்து புலிகள் கொல்லப்பட்டு இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகில் இருக்கும் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட புலிகள் வனத்துறை சார்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சேத்துமடை அருகே இருக்கும் போத்தமடை ஓடை பகுதியில் பத்து வயது மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று சடலமாக கிடந்தது. அதேபோல புங்கமடை பகுதியிலும் எட்டு வயது மதிக்கத்தக்க பெண் புலியின் சடலமொன்று கிடந்தது.

அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் உடனடியாக மேலதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். பின் தேசிய புலிகள் காப்பக ஆணைய அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முன்னிலையில் கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அதே இடத்தில் விலங்குகளுக்கு உடற்கூறு ஆய்வு நடந்தது.  இரண்டு புலிகளின் வயிற்றிலும் காட்டுப் பன்றியின் இறைச்சி இருப்பதால் காட்டு பன்றியை கொன்று அதன் இறைச்சியில் விஷம் வைத்து புலிகள் கொல்லப்பட்டு இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும் உடற்கூறாய்வு முடிவுகள் வந்த பிறகே நிலைமை தெரிய வரும்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் விவசாயிகளிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் அந்த பகுதியில் இருக்கும் ஆடு, கோழிகளை புலி ஒன்று அடித்து தின்றது. அப்போது அதை பிடிக்க வனத்துறையினர் முயன்றனர். ஆனால் அம்முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் தற்போது அதே பகுதியில் இரு புலிகள் மர்ம முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!