மை வி3 ஆன்லைன் டிவி நிறுவனர் விஜயராகவனை காவல் துறையினர் மதுரையில் கைது செய்து கோவைக்கு அழைத்து வருகின்றனர்.
விளம்பரம் பார்த்தால் பணம் வரும், லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று விளம்பரம் செய்யப்பட்ட மை வி3 ஆட்ஸ் நிறுவனம் மீது பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்நிறுவனத்தின் நிர்வாகி சக்தி ஆனந்தன் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இதனிடையே மதுரை தனக்கன்குளம் பகுதியைச் சேர்ந்த விஜயராகவன் என்பவர் கோவையில் மை வி3 ஆன்லைன் டிவி என்ற நிறுவனத்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிறுவனத்திலும் பலர் முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மை வி3 ஆட்ஸ் நிறுவனம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் விஜயராகவனை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
அசுர வேகத்தில் மோதி தள்ளிய சொகுசு கார்; நெல்லையில் சாலையை கடக்க முயன்ற மூவர் பலி
காவல் துறையினர் அழைத்ததும் அச்சமடைந்த விஜயராகவன் தனக்கு உடல்நிலை சரியில்லை, நெஞ்சு வலிப்பதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் அவரை பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். விஜயராகவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடலில் எந்தவித பாதிப்பும் இல்லை. அனைத்து உறுப்புகளும் இயல்பாக செயல்படுவதாக அறிக்கை அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து விஜயராகவனை கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கோவைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.