மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு நெருங்கிவரும் நிலையில், கோவை மக்களவைத் தொகுதியின் கள நிலவரம் என்ன?
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஒரே கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகள் தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமைக்கப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, அனைவராலும் உற்று நோக்கப்படும் கோவை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பாக சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பாக அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலம் திமுகவுக்கு எப்போதும் சவால் நிறைந்ததாகவே உள்ளது. இதனை திமுக தனக்கான பிரஸ்டிஜ் ப்ராப்ளமாகவும் பார்க்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக பெருவெற்றி பெற்றாலும், கோவையில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுகவே வெற்றி பெற்றது. ஒரு தொகுதியில் கூட்டணி கட்சியான பாஜக வெற்றி பெற்றது. அம்மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றி பெற்றது.
இதையடுத்து, கோவையை தனது கோட்டையாக மாற்ற செந்தில் பாலாஜியை திமுக களமிறக்கியது. அவருக்கு அதற்கான பணிகளை செய்து உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு அபார வெற்றியை தேடித் தந்தார். அதிமுகவின் கோட்டை ஆக இருந்த கோவை மாவட்டம் செந்தில் பாலாஜி பொறுப்புக்கு வந்த பின்னர் திமுகவின் கோட்டையாக மாறி வருகிறது. மக்களவைத் தேர்தல் அவரது களப்பணி பெரிதும் கவனிக்கப்பதவிருந்ததற்கு இடையே, சட்டவிரோத பண பறிமாற்ற வழக்கில் அவர் சிறை சென்று விட்டார்.
மக்களவைத் தேர்தல் 2024: மதுரை தொகுதி - கள நிலவரம் என்ன?
இருப்பினும், கோவையில் அவர் போட்ட விதை இன்று வளர்ந்து நிற்கிறது. கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜி தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக இருப்பதால் அவர் சிறையில் இருந்தாலும் பிரசார மேடைகளில், ‘நாம ஜெயிக்கிறோம்; நாம மட்டும்தான் ஜெயிக்கிறோம்’ என்ற செந்தில் பாலாஜியின் முழக்கம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
கோவை மக்களவை தொகுதியை பொறுத்தவரை திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் அந்த தொகுதியில் நேரடியாக போட்டியிடுவதில்லை. பெரும்பாலும் கூட்டணி கட்சிகளுக்கே கோவை தொகுதி ஒதுக்கப்படுகிறது. கடந்த 1952ஆம் ஆண்டு முதல் 2019 மக்களவைத் தேர்தல் வரை கோவையின் வரலாற்றை பார்த்தால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும், காங்கிரஸும் மட்டுமே அங்கு கோலோச்சியுள்ளது. 6 முறை காங்கிரஸும், 8 முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. இரண்டு முறை திமுகவும், ஒரு முறை அதிமுகவும், இரண்டு முறை பாஜகவும் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர்,நடராஜன் 571,150 லட்சம் வாக்குகள் பெற்று 1.5 லட்சத்துக்கும் அதிகமாக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 3,92,007 வாக்குகள் பெற்று இரண்டாமிடமும், மக்கள் நீதி மய்யத்தின் மகேந்திரன் 1,45,104 வாக்குகள் பெற்று மூன்றாமிடமும் பிடித்தனர்.
இந்த முறை பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ளது. கூட்டணி கட்சிக்கு கோவையை திமுகவும் ஒதுக்கவில்லை. எனவே, திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் இடையே கோவையில் இந்த முறை மும்முனை போட்டி நிலவுகிறது.
இருப்பினும், செந்தில் பாலாஜியின் மேஜிக்கும், அவர் ஏற்கனவே செய்து வைத்து விட்டு சென்ற பணிகளும் திமுகவுக்கு கைகொடுக்கும் என்ற அபார நம்பிக்கையில் உடன்பிறப்புகள் உள்ளனர். கோவை கணிசமாக வாக்கு வங்கி வைத்திருக்கும் மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் உள்ளது போன்றவை அக்கட்சிக்கு கூடுதல் பலம்.
அதேசமயம், கோவை மக்களவை தொகுதியில் பாஜகவுக்கும் கணிசமாக வாக்கு வங்கி உள்ளதை பாஜகவினர் தங்களுக்கு பலமாக பார்க்கின்றனர். வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டிருப்பதும் அவர்களுக்கு ப்ளஸ் என நம்புகின்றனர். மறுபுறம், அதிமுகவின் கோட்டையாக கோவையை வைத்திருப்பதில் பெரும் பங்கு எஸ்.பி.வேலுமணிக்கு உள்ளது. அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் அவருக்கு நெருக்கமானவர் என்பதால், அவரும் டஃப் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் 2024: திருச்சி தொகுதி - கள நிலவரம் என்ன?
கோவை மக்களவை தொகுதியில் கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர், பல்லடம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில், பல்லடம் மட்டும் திருப்பூர் மாவட்டத்தில் வருகிறது. மற்ற 4 சட்டமன்றத் தொகுதிகளும் கோவை மாவட்டத்தில் வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்த 6 சட்டமன்றத் தொகுதிகளில் 5இல் அதிமுகவும், ஒரு தொகுதியில் அப்போது அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாஜகவும் வெற்றி பெற்றது. ஆனால், அதற்கு அடுத்து நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கோவையை திமுக வசமாக்கினார் செந்தில் பாலாஜி.
ஆனால், பலரும் கோவையை பாஜகவின் கோட்டையாக கூறுகிறார்கள். இதுகுறித்து அரசியல் விமர்சகர்களிடம் பேசுகையில், அதுபோன்ற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி மட்டும்தான் பாஜக வலுவாக இருக்கக்கூடியது. அந்த தொகுதியை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் அதிமுக, திமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்களின் பாரம்பரிய வாக்கு வங்கிகள் உள்ளதாக சுட்டிக்காட்டுகிறார்கள்.
கிராமப்புறங்களில் சில இடங்களில் பாஜக வளர்ச்சியடைந்துள்ளதாக எடுத்துக் கொண்டாலும் தனித்து நின்று சோபிக்கும் அளவுக்கு வளரவில்லை என்கிறார்கள். கோவை தெற்கில் மட்டுமே பாஜகவுக்கு செல்வாக்கு உள்ளது. ஆனால், இது மக்களவைத் தேர்தல் என்பதால், பாஜகவால் தனித்து நின்று வெற்றி பெறுவது கடினமே என்கிறார்கள்.
கடந்த தேர்தலில் பாஜக, அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் இணைந்து 31 சதவீத வாக்குகளை பெற்றன. இப்போது பாஜகவுக்கு எதிராக அதிமுகவும், தேமுதிகவும் நிற்கின்றன. எனவே, 31 சதவீத வாக்குகளில் அதிமுகவின் 26 சதவீத வாக்குகளை பிரித்தால் பாஜகவுக்கு 5 சதவீத வாக்குகள் மட்டுமே உள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, ஒப்பீட்டளவில் கோயம்புத்தூரில் திமுக vs அதிமுக என்றே களம் இருக்கும் என தெரிகிறது.