கோவை பேரூர் அருகே ஆலாந்துறை பகுதியில் பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல் என பொய் புகாரி கூறி ஆசிரியர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் பேரூர் அருகே ஆலாந்துறை அரசு மேல் நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கவுண்டம் பாளையம் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவர் திருமணம் ஆகாதவர் எனக் கூறப்படுகிறது. மேலும் இவர் 2020ல் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வில் தேர்வாகி அரசு பணிக்கு வந்தவர்.
இந்நிலையில் கடந்த சில மதங்களாக அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவி ஒருவர் புகார் கூறி இருந்தார். இதனால் புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ஆனந்த குமாரை பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் அந்த பள்ளி மாணவர்கள் அந்த உடல் கல்வி ஆசிரியர் நல்லவர் என்றும், அவர் தவறானவர் இல்லை என்றும் மாணவி தான் கடந்த சில மாதங்களாக ஆசிரியரை காதலிப்பதாக கூறி வந்ததாகவும் அதற்கு அவர் மறுக்கவே அந்த மாணவி பொய்ப் புகார் கூறி ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். எனவே அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அதே பள்ளியைச் சேர்ந்த சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.