மலை கிராம மக்களின் இளம் மருத்துவர்.. டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்பு.. அதிர்ச்சியில் தாய் தற்கொலை முயற்சி..!

By vinoth kumarFirst Published Apr 16, 2020, 10:21 AM IST
Highlights
மற்ற மருத்துவர்கள் போல பகுதி நேரம் அரசு வேலையும், மீதி நேரம் சொந்த வேலையும் பார்க்க விரும்பாத ஜெயமோகன் முழு நேரமும் அங்குள்ள பழங்குடி மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
கொரோனா வைரஸ் மருத்துவர்களையும் விட்டுவைக்காத நிலையில், தற்போது டெங்கு காய்ச்சலுக்கு இளம் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம், சிறுமுகை அருகிலுள்ள ரேயன் நகரை சேர்ந்தவர் வாசுதேவன். எல்.ஐ.சி முகவராக இருக்கிறார். இவருடைய மகன் ஜெயமோகன்(30).  2007ம் ஆண்டு +2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்தவர். பின்னர் மருத்துவம் படிக்க விரும்பிய இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படிப்பை முடித்தார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவராக தேர்வு பெற்றார். நீலகிரி மாவட்டத்தில் இவருக்கு பணி ஒதுக்கப்பட்டது. முதலில் நீலகிரியில் பணியாற்றிய இவர் தற்போது, சத்திய மங்கலம் அருகில் உள்ள தெங்கு மறாட்டா என்ற மலைக் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார்.


மற்ற மருத்துவர்கள் போல பகுதி நேரம் அரசு வேலையும், மீதி நேரம் சொந்த வேலையும் பார்க்க விரும்பாத ஜெயமோகன் முழு நேரமும் அங்குள்ள பழங்குடி மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.  இந்நிலையில், இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென காய்ச்சல் வந்தது. இதைத்தொடர்ந்து செவிலியர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயமோகனை அவருடைய வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்றதும் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜெயமோகனை பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.


அங்கு மருத்துவ பரிசோதித்துவிட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு அவருக்கு கொரோனா, டைபாய்ட், டெங்கு உள்ளிட்ட நோய் பாதிப்பு உள்ளதா? என்று அறிய ரத்த பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அதில், ஜெயமோகனுக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டது.  தொடர்ந்து டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஜெயமோகன் பரிதாபமாக உயிரிழந்தார். மகன் இறந்த செய்தியை அறிந்த அவரது தாய் ஜோதி அதிர்ச்சியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மக்களுக்காக மருத்துவம் பார்த்த ஜெயமோகனின் மரணம் அக்கிராம மக்கள் உட்படப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
click me!