கொரோனா பாதிப்பில் முதலிடம்... உச்சக்கட்ட அச்சத்தில் கோவை மக்கள்...!

By Kanimozhi PannerselvamFirst Published May 27, 2021, 11:14 AM IST
Highlights

தினசரி பாதிப்புகள் 4 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா ஹாட் ஸ்பாட்டாக கோவை மாறியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவ தொடங்கியதில் இருந்தே அதிக பாதிப்புக்களுடன் முதலிடத்தில் இருந்த சென்னை, நேற்று முதன் முறையாக இரண்டாமிடத்திற்கு சென்றுள்ளது.கொரோனா தொற்று பரவலில் கோவை தமிழகத்திலேயே முதலிடம் பிடித்துள்ளது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  தினசரி பாதிப்புகள் 4 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா ஹாட் ஸ்பாட்டாக கோவை மாறியுள்ளது. நேற்று ஒரே நாளில் கோவையில் 4, 268 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கோவையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 

கோவை மாவட்டம் முழுவதும் 898 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக மாநகராட்சி பகுதிகளில் 602 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாநகரில் மட்டும் கடந்த 10 நாட்களில் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா  பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

கோவையில் கிடுகிடுவென  அதிகரிக்கும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக சென்னையில் இருந்து உயர்மட்ட  குழு அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று பரவலுக்கான காரணம் குறித்து கோவையின் முக்கிய பகுதிகளில் ஆய்வு நடத்த உள்ள உயர்மட்ட குழு அதிகாரிகள், அதன் பின்னர் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையிலும் ஈடுபட உள்ளனர். கோவையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பரிசோதனை எண்ணிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் மருந்த்துவர்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளது. 

click me!