திமுக நிர்வாகிகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. எனவே, கூட்டணியை பலப்படுத்தும் முயற்சிகள், அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளை அக்கட்சி செய்து வருகிறது. மேலும், அனுபவமிக்க மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்களையும் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளையும் அக்கட்சி மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், தமிழகத்தை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 18 பேர் பாஜகவில் கடந்த வாரம் இணைந்தனர். குறிப்பாக, அதிமுகவை சேர்ந்த பலர் அதில் இருந்தனர். இந்த நிலையில், திமுக நிர்வாகிகள் உள்பட மாற்றுக்கட்சியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பாஜகவில் இணைந்துள்ளனர்.
பாஜகவை தூங்கவிடாமல் செய்கிறது திமுக - முதல்வர் ஸ்டாலின்
திமுக மாவட்ட பிரதிநிதி வெற்றிவேல், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மனோஜ் பிரபாகர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பாஜகவில் இணைந்துள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இன்றைய தினம் கோவையில், பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் முன்னிலையில், திமுக மாவட்ட பிரதிநிதி வெற்றிவேல், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மனோஜ் பிரபாகர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சகோதர சகோதரிகள், பிரதமர் மோடியின் நல்லாட்சியால் கவரப்பட்டு, பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.
இன்றைய தினம் கோவையில், மாநிலப் பொதுச் செயலாளர் திரு அவர்கள் முன்னிலையில், திமுக மாவட்ட பிரதிநிதி திரு. வெற்றிவேல், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் திரு. மனோஜ் பிரபாகர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சகோதர சகோதரிகள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு… pic.twitter.com/LSM8vCFZzj
— K.Annamalai (@annamalai_k)
கட்சியில் இணைந்த அனைவரையும் வரவேற்று, வரும் பாராளுமன்றத் தேர்தலில், நமது பிரதமரின் கரங்களை வலுப்படுத்த, முழு உழைப்பையும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.
அதிமுகவின் கோட்டை ஆக இருந்த கோவை மாவட்டம் செந்தில் பாலாஜி பொறுப்புக்கு வந்த பின்னர் திமுகவின் கோட்டையாக மாறி வருகிறது. இதனிடையே, செந்தில் பாலாஜி சிறை சென்றதும், திமுகவின் கீழ்மட்ட நிர்வாகிகள் பலரும் அதிமுக, பாஜகவில் இணைந்து வருவதாக கூறப்படுகிறது.