சுயேச்சை வேட்பாளருக்கு அடித்த யோகம்..! குலுக்கல் முறையில் தேர்வு..!

By Manikandan S R SFirst Published Jan 2, 2020, 6:07 PM IST
Highlights

அவிநாசி அருகே வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நீண்ட இழுபறிக்கு பிறகு தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து எஞ்சிய 27 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் இரண்டு நாட்களிலும் அமைதியாக நடந்து முடிந்தது. வாக்குப் பதிவுக்குப் பிறகு வாக்குப்பெட்டிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் இருந்தது.

உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 7 மணி அளவில் தேர்தல் கண்காணிப்பாளர்கள், தேர்தல் முகவர்கள் முன்னிலையில் வாக்கு பெட்டிகளின் சீலை உடைத்தனர். பின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகளும் அதன்பிறகு பொதுமக்கள் அளித்த வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பிரதான கட்சிகளான திமுகவிற்கும் அதிமுகவிற்கு கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது. இருகட்சிகளும் சம பலத்துடன் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றன.

இதனிடையே அவிநாசி அருகே வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவிநாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட அய்யம்பாளையம் ஊராட்சி ஒன்றாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு அங்கப்பன், பொன்னுசாமி என இரு சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையில் இருவரும் தலா 47 வாக்குகள் பெற்று சம அளவில் இருந்ததையடுத்து வேட்பாளர்களின் ஒப்புதலுடன் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய தேர்தல் அதிகாரி முடிவு செய்தார். அதன்படி நடந்த குலுக்கல் முறையில் அங்கப்பன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

click me!