மேட்டுப்பாளையத்தில் பிரபல உணவக வளாகத்திற்குள் நுழைந்த இரு காட்டு யானைகளால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உதகை சாலையில் அண்மை காலமாக புதிது புதிதாக ஏராளமான கடைகள் உருவாகி வருகிறது. இந்த பகுதி மலையிட பாதுகாப்பு பகுதி என்ற போதிலும் உரிய அனுமதி கிடைக்காமல் இருந்தாலும் அதில் உள்ள சில ஓட்டைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சிறியது முதல் பெரிய நிறுவனங்கள் வரை புதிது புதிதாக கட்டிடங்களை கட்டி வருகின்றனர்
இதனால் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து நெல்லிமலை வனப்பகுதிக்குள் செல்ல சாலையை கடக்கும் காட்டு யானைகள் வலசை பாதை என்பது தடைபட்டு வருகிறது
குறிப்பாக கடந்த சில மாதங்களாக இந்த பகுதியில் பாகுபலி என்று பொதுமக்களால் அழைக்கப்படும் காட்டு யானை, மற்றும் மற்றுமொரு காட்டு யானை உலாவி வரும் நிலையில் இன்று அந்த யானைகள் மேட்டுப்பாளையம் வனத்தில் இருந்து உதகைசாலையினை கடந்து செல்ல முயன்றது
அப்போது அந்த சாலை வழியாக அரசு பேருந்து ஒன்று வந்த நிலையில் அதனை ஏதும் செய்யாமல் அந்த யானைகள் அருகில் இருந்த பிரபல தனியார் ஹோட்டல் வளாகத்திற்குள் நுழைந்தது. இதனை சற்றும் எதிர்பார்த்திராத அங்கிருந்தவர்கள் காட்டுயானை பாகுபலி மற்றும் ஒரு யானை இரண்டு காட்டு யானைகள் திடீரென வருவதை கண்டு அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதனையடுத்து, தகவல் அறிந்து பின் தொடர்ந்து வந்த வனத்துறையினர், யானைகள் யாரையும் தாக்காத வண்ணம் பொதுமக்களை எச்சரித்து பாதுகாப்பு அளித்தனர். பின்னர், யானைகளை பத்திரமாக சாலையை கடக்க செய்து மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.