பாஜக வெற்றி பெற வேண்டி தனியார் தோட்டத்தில் தமிழக பாஜகவின் மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி வழிபாடு செய்தார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இறுதி மற்றும் 7ஆவது கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
முன்னதாக, மக்களவை தேர்தலின் அனைத்து கட்ட வாக்குப்பதிவுகளும் நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து, பெரிதும் எதிர்பார்ப்புக்குள்ளான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. அதில், பாஜக கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகள் கணித்துள்ளன.
இந்த நிலையில், பாஜக வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராக வேண்டி கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் தோட்டம் ஒன்றில் தமிழக பாஜகவின் மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி வழிபாடு செய்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த கண்டியூர் கிராமத்தில் உள்ள தனியார் தோட்டம் ஒன்றில் தமிழக பாஜகவின் மேலிட இணை பொறுப்பாளர் டாக்டர் சுதாகர் ரெட்டி ஹோமம் வளர்த்து சிறப்பு சிவகாளி பூஜை மற்றும் கோ பூஜை நடத்தி வழிபட்டார்.
Exit Poll Result 2024 மோடியின் கற்பனை கருத்துக்கணிப்பு: ராகுல் காந்தி சாடல்!
இது குறித்து அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று நரேந்திர மோடி 3ஆவது முறையாக பிரதமராகவும், 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா உருவாக மக்களின் நல்வாழ்வை வளப்படுத்தவும், தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் நோக்கத்துடனும் இந்த பூஜையை தனிப்பட்ட முறையில் நடத்தியதாக தெரிவித்தார்.
தமிழக பாஜகவின் மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தனியார் தோட்டத்தில் நடத்திய வழிபாடு குறித்த வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.