வெள்ளியங்கிரி மலைக் கோவிலுக்குச் சென்ற பக்தர்களில் கடந்த 24 மணி நேரத்தில் மூவர் அடுத்தடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தென்கையிலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை கோவிலுக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். 7 மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்ககூடிய சிவலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் வந்த வண்னம் உள்ளனர்.
பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கபடுகின்றனர். இந்த ஆண்டு ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு பக்தர்கள் உயிரிழந்த நிலையில் வனத்துறையினர் தற்காலிக மருத்துவ முகாம்கள் அமைத்து பக்தர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மலை ஏற அனுமதிக்கபட்டு வருகின்றனர்.
undefined
இந்நிலையில் மலை ஏறிய பக்தர்கள் இருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் நேற்று வெள்ளியங்கிரி மலை ஏறிய ஹதாரபாத்தை சேர்ந்த சுப்பாராவ்(வயது 68) நான்காவது மலையில் ஏறி கொண்டிருந்த நிலையில் திடீரென உடல்நலம் பாதிக்கபட்டு உயிரிழந்தார்.
இதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன்(35) என்பவரும் உடல்நிலை பாதிக்கபட்டு முதலாவது மலைப்பாதையில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் உடல்களை மீட்டு மலை அடிவாரத்திற்கு எடுத்து வந்துனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன்(46) இரண்டாவது மலை அருகே வழுக்குப்பாறை பகுதியில் உடல் நலம் பாதிக்கபட்டு உள்ளதாக கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் அங்கு சென்ற போது பாண்டியன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதனையடுத்து அவரது உடலை மீட்டு மலை அடிவாரம் கொண்டு வந்த வனத்துறையினர் ஆலாந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த பின்னர் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆண்டு தோறும் மலை ஏறுபவர்கள் அதிகரித்து வரும் நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டும், உடல் நிலை பாதிக்கபட்டும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
மலை ஏற அனுமதிக்கபடும் நாட்களில் மட்டுமே வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் தற்காலிக மருத்துவ முகாம் குறைவாக உள்ள நிலையில் தவிர்த்து அனைத்து வசதுகளுடன் மருத்துவமனை அமைத்திட வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.