நாடாளுமன்ற தேர்தலில் மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் தொகுதி கோவை, இந்த தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை களம் இறங்க இருப்பதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. எனவே இந்த தொகுதியில் திமுக, அதிமுக, பாஜகவின் செல்வாக்கு எந்தநிலையில் உள்ளது என்பதை பார்க்கலாம்.
சூடு பறக்கும் கோவை தொகுதி
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் களம் சூடு பிடித்துள்ளது. தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது. அடுத்ததாக அதிமுகவும் கூட்டணி தொடர்பாக பின்னடைவை சந்தித்தாலும் தற்போது படு வேகமாக களத்தில் இறங்கியுள்ளது.
இந்த இரண்டு திராவிட கட்சிகளுக்கு போட்டியாக பாஜகவும் இறங்கியுள்ளது. எப்போதும் இல்லாத அளவாக பாஜகவின் செல்வாக்கு எந்த அளவிற்கு உயர்ந்து உள்ளது என்று பார்ப்பதற்கு இந்த தேர்தல் ஒரு கண்ணாடியாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரை, பிரதமர் மோடியின் தமிழக தொடர் சுற்றுப்பயணத்தால் பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்ததா.? இல்லையா.? என ஜூன் 4 ஆம் தேதி அறிய அரசியல் வட்டாரம் காத்துள்ளது.
திமுக வேட்பாளர் யார்.?
இந்தநிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முக்கிய வேட்பாளர்கள் களம் இறங்கினாலும், ஒரு சில தொகுதிகள் ஸ்டார் அந்தஸ்தை பெறும் அந்த வகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடவுள்ள கோவை தொகுதி பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இந்த தொகுதியில் திமுக சார்பாக கணபதி ராஜ்குமாரும், அதிமுக சார்பாக சிங்கை ராமசந்திரனும் போட்டியிடவுள்ளனர். இந்த மும்முனை போட்டி யாருக்கு சாதகமாக இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.
திமுக சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் கணபதி ராஜ்குமார், கோவை மாநகரின் 5வது மேயராக 2011 - 16 வரை இருந்தார்.மேலும் அதிமுகவின் கோவை மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். செந்தில் பாலாஜி ஆதரவாளராக பார்க்கப்படும் கணபதி பி.ராஜ்குமாரை திமுக வேட்பாளராக தேர்வு செய்துள்ளது.
அதிமுக வேட்பாளரின் செல்வாக்கு என்ன.?
இதே போல கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், இவர் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநிலத் தலைவராக இருந்து வருகிறார். இவருடைய தந்தையான சிங்கை கோவிந்தராஜ் 1991-ம் முதல் 1996-ம் ஆண்டு வரை கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இதன் காரணமாக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு சிங்காநல்லூர் தொகுதியில் செல்வாக்கு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கோட்டை காரணமாக தனது செல்வாக்கைப்பயன்படுத்து குறிப்பிடத்தக்க வாக்குகளை கவர வாய்ப்புள்ளது.
அண்ணாமலை சாதிப்பாரா.?
திமுக மற்றும் அதிமுகவிற்கு போட்டியாக களம் இறங்கும் அண்ணாமலை, தனது சொந்த தொகுதியான கரூர் மாவட்டத்தில் இருந்து விலகி கோவையில் போட்டியிடுகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அரவங்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். இதனையடுத்து நாடாளுமன்ற தொகுதியான கோவைக்கு தற்போது மாறியுள்ளார். கோவையில் பல இடங்களில் பாஜக சார்பாக நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். மேலும் பிரதமர் வாகன பேரணியும் கோவையில் நடத்தி வாக்குகள் கவர்ந்துள்ளார்.
வெற்றி வாய்ப்பு யாருக்கு.?
கோவை குண்டு வெடிப்பு சம்பவங்களை மக்கள் மனதில் மீண்டும் நினைவுப்படுத்தி வாக்கு சேகரித்துள்ளார். கோவை தொகுதியை பொறுத்தவைர மும்முனை போட்டியாக இருந்தாலும், திமுகவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், முஸ்லிம் அமைப்புகள், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளின் ஆதரவு உள்ளது. மேலும் அதிகளவு தொழிற்சாலைகள் இருப்பதால் தொழிலாளர்களின் வாக்கு எந்த பக்கம் செல்லும் என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. எனவே வாக்கு எந்த அளவிற்கு யாருக்கு சாதகமாக செல்லும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்