
Vijay Greets Vinayagar Chaturthi 2025! விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நடிகரும், தவெக தலைவருமான விஜய், ''விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்'' என்று தெரிவித்துள்ளார். விஜய் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை. அப்போது அவருக்கு கடும் கண்டங்கள் எழுந்தன. விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து சொல்லவில்லை. இது சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் பழைய தந்திரம் என்று பாஜக குற்றம்சாட்டியிருந்தது.
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொன்ன விஜய்
விஜய் ஒரு குறிப்பிட்ட மதத்தை புறக்கணிக்கிறார் என்ற தோற்றம் கடுமையாக முன்வைக்கப்பட்டது. கடும் விமர்சனங்களுக்கு ஆளான விஜய், அதன்பிறகு வந்த ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜைக்கு வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் இப்போது விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ''இந்த முறை விஜய் சுதாரித்து முன்கூட்டியே வாழ்த்து சொல்லியுள்ளார். ஏனெனில் கடந்த ஆண்டு பாஜக கொடுத்த அடி அப்படி'' என்று பாஜகவினர் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு
அதே வேளையில் இந்த ஆண்டு விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொன்னதை பாஜக வரவேற்றாலும், நாம் தமிழர் கட்சியினர் மற்றும் திராவிட கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ''பெரியாரை கொள்கை தலைவராக கொண்டவர் எப்படி விநாயகர் சதுர்த்துக்கு வாழ்த்து தெரிவிக்கலாம்'' என நாம் தமிழர் கட்சியினர் கேட்கின்றனர்.
விஜய்க்கு பெரியாரிஸ்டுகள் வேண்டுகோள்
''கடவுள் நம்பிக்கையாளர்கள் உங்கள் கட்சியில் இருக்கிறார்கள் அதற்காக வாழ்த்து சொல்கிறேன் என்று எல்லா கடவுள் பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்லத் தேவையில்லை. ஏனெனில் இந்தக் கடவுள் என்ற மூலம் தான் இந்த மண்ணில் நடக்கும் மத அநியாயங்களுக்கு துணையாக எல்லா நிகழ்வுகளிலும் எடுத்துச் செல்லப்படுகிறது. வாழ்த்து சொல்வதற்கென்றே தமிழர்களின் புத்தாண்டு தமிழர் திருநாளாகிய பொங்கல் பண்டிகை இருக்கிறது. ஒரு மிகப்பெரிய இளைஞர் கூட்டம் உங்களை நம்பி இருப்பது தெரிகிறது அந்த இளைஞர்களை அரசியல்மயப்படுத்த வேண்டிய பொறுப்பும் உங்களுக்கு இருக்கிறது'' என்று ஒரு சில பெரியாரிஸ்டுகள் விஜய்யின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கு கீழே கமெண்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.
தவெகவினர் பதிலடி
ஆனால் தவெகவினர் நாம் தமிழர் கட்சியினருக்கும், பெரியாரிஸ்டுகளுக்கும் பதிலடி கொடுத்து வருகின்றனர். ''பெரியார் கடவுள் மறுப்பு கொள்கையை தவிர, அவரின் அனைத்து கொள்கைகளையும் ஏற்றுக் கொள்கிறோம். அவரவர் மதத்ததை பின்பற்ற அனைவருக்கும் உரிமை இருக்கிறது என தவெக முதல் மாநாட்டிலேயே விஜய் தெளிவாக சொல்லி விட்டார்'' என தவெகவினர் தெரிவித்து வருகின்றனர்.