
Supreme Court Stays TN Party Flagpole Ban: தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் பொது இடங்களில் வைக்கப்படுவது போக்குவரத்து தடையையும் சுற்றுச்சூழல் பாதிப்பையும் ஏற்படுத்துவதாகக் கருதி பொது இடங்களில் அரசியல் கட்சியல் கொடிக்கம்பங்கள் வைக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டு இருந்தது. அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்தநாள், நினைவு நாளின்போதும், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களின்போதும் அந்தந்த கட்சிகளின் கொடிகள் மக்களுக்கு இடையூராக இருப்பதாக கருதி நீதிபதி இளந்திரையன் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
பொது இடங்களில் கட்சி கொடிகளை அகற்ற வேண்டும்
தமிழகத்தின் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சி, சமுதாய அமைப்புகளின் நிரந்தர கட்சிக் கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும். கொடிகளை அகற்ற மறுக்கும் கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி அகற்றச் செய்ய வேண்டும். அகற்றுவதற்கான செலவுகளை அந்த கட்சிகளிடமே வசூலிக்க வேண்டும் என நீதிபதி கூறியிருந்தார்.
அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உத்தரவு
இந்த உத்தரவு, தமிழ்நாடு அரசு மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும். குறிப்பாக, சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி போன்ற பெரு நகரங்களில் உள்ள ஆயிரக்கணக்கான கொடிக்கம்பங்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டு இருந்தார். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசு அதிகாரிகள் பொது இடங்களில் கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற முடிவு செய்தனர்.
அரசியல் கட்சிகள் எதிர்ப்பு
இது மட்டுமின்றி நீதிமன்றத்தின் உத்தரவால் தமிழக அரசியல் கட்சிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தன. ''இது கட்சிகளின் உரிமைகளை பறிக்கும் ஒரு மோசமான முடிவு'' என்று திமுக, அதிமுக ஆகிய பிரதான கட்சியை சேர்ந்த தலைவர்கள் தெரிவித்தனர். இந்த உத்தரவால் கட்சிகளின் பிரச்சாரங்கள் மற்றும் அடையாளம் பாதிக்கப்படும் என்று அனைத்து கட்சிகளும் தெரிவித்தன. குறிப்பாக தமிழகத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்தன.
உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தமிழக அரசியல் கட்சிகள் மேல்முறையீடு செய்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றமும் அந்த உத்தரவை உறுதி செய்தது. இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்த நிலையில், பொது இடங்களில் கட்சிக் கொடிகளை அகற்ற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. மேலும் இது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவால் தமிழக அரசியல் கட்சிகள் நிம்மதியடைந்துள்ளன.