
Madras High Court orders to complete property cases within 6 months: நிலுவையில் உள்ள அனைத்து சொத்து பிரிவினை வழக்குகளையும் ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது தோடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, சென்னை, மதுரை, மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள அனைத்து சார்பு நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
கீழமை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் பேரில் சொத்து பிரிவினை வழக்குகளை விரைந்து முடிப்பதன் மூலம் பாகப்பிரிவினை வழக்குகளின் தேக்கத்தைக் குறைக்க முடியும். மேலும் நீதித்துறை செயல்பாடுகளைத் துரிதப்படுத்தவும் முடியும். இந்த வழக்குகளை விரைந்து முடிக்க, தேவைப்படும் இடங்களில் சிறப்பு அமர்வுகளை அமைத்து, விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
6 மாதத்தில் வழக்குகளை முடிக்க உத்தரவு
இந்த நடவடிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளால் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்கவும், வழக்காடுவோருக்கு விரைவான நீதியை உறுதி செய்யவும் வழிவகுக்கும். மேலும் உயர்நீதிமன்ற உத்தரவு ஆயிரக்கணக்கான சொத்து பிரிவினை வழக்குகளைக் கையாள்வதில் நீதிமன்றங்களுக்கு ஒரு தெளிவான வழிகாட்டுதலை வழங்குகிறது.
பாகப்பிரிவினை என்பது என்ன?
பாகப்பிரிவினை என்பது ஒரு குடும்பத்தில் உள்ள பரம்பரைச் சொத்தை வாரிசுகளுக்கு இடையே சட்டபூர்வமாகப் பிரித்துக் கொடுக்கும் நடைமுறையாகும். இது பெரும்பாலும் தந்தைவழி சொத்துக்களை மகன்கள் மற்றும் மகள்கள் உட்பட அனைத்து வாரிசுகளுக்கும் சமமாக பிரித்துக் கொடுப்பதாகும். பாகப்பிரிவினை ஆவணமானது துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படாத பாகப்பிரிவினை சட்டப்படி செல்லாது. ஒவ்வொருவருக்கும் பிரிக்கப்பட்ட சொத்தின் எல்லைகள், மதிப்பு மற்றும் உரிமைப் பங்கு ஆகிய விவரங்கள் தெளிவாக ஆவணத்தில் குறிப்பிடப்படும்.
நிலுவையில் உள்ள வழக்குகள் வேகமாக முடிவடையும்
ஆனால் பெரும்பாலான இடங்களில் பாகப்பிரிவினையின் போது பிரச்சனை எழுந்து விடுகிறது. தஙகளுக்கு மிகவும் குறைவான சொத்து வழங்கப்பட்டு இருப்பது என கருதும் வாரிசுதாரர்கள் நீதிமன்றத்தில் முறையீடுகின்றனர். நீதிமன்றம் தீவிர விசாரணை நடத்தி சொத்து பிரிவினை வழக்குகளை தீர்த்து வைக்கும். இப்படி பாகப்பிரிவினையின்போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பல்வேறு நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளை தான் 6 மாதங்களுக்குள் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் இப்போது உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.