மருத்துவரின் உடலை மறு அடக்கம் செய்வது சாத்தியமற்றது..! சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!

By Manikandan S R SFirst Published Apr 25, 2020, 1:13 PM IST
Highlights

சுகாதாரத் துறையினர் ஆலோசனையின்படி கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவர் சைமன் பலியாகி இருக்கும் நிலையில் அவரது உடலை தோண்டி எடுத்து மறு அடக்கம் செய்வது பாதுகாப்பானதாக இருக்காது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் அனைவரும் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டு மருத்துவர்களால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சென்னையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்த சைமன் ஹெர்குலிஸ் என்கிற மருத்துவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.  தீவிர சிகிச்சையில் இருந்த அவர் மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடலை மருத்துவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் அடக்கம் செய்ய அண்ணா நகர் வேலங்காடு மயானத்திற்கு சென்றபோது அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் தாக்கப்பட்டு காயம் ஏற்பட்டது. 

இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் அவசர அவசரமாக மருத்துவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்து பலியான மருத்துவரின் உடலை புதைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. தமிழக முதல்வர் இச்சம்பவத்திற்கு தனது கடும் கண்டனத்தை பதிவு செய்ததோடு உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்தினரையும் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியிருந்தார். அப்போது முதல்வரிடம் பேசிய மருத்துவரின் மனைவி ஆனந்தி தனது கணவரின் உடலை உரிய மரியாதைகளுடன் கல்லறையில் மறு அடக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதுகுறித்து ஆலோசிக்கப்படும் என முதல்வர் பதிலளித்திருந்தார். 

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி மறு அடக்கம் செய்வது சாத்தியமற்றது என தெரிவித்துள்ளது. சுகாதாரத் துறையினர் ஆலோசனையின்படி கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவர் சைமன் பலியாகி இருக்கும் நிலையில் அவரது உடலை தோண்டி எடுத்து மறு அடக்கம் செய்வது பாதுகாப்பானதாக இருக்காது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

click me!