திடீர் வீடியோ கால்..! பத்திரிக்கையாளர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய பீலா ராஜேஷ்..!

By Manikandan S R SFirst Published Apr 25, 2020, 10:35 AM IST
Highlights

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் ஊடகவியலாளர்களை தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியிருக்கிறார். வீடியோ கால் மூலமாக பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் சிகிச்சைகள் குறித்தும் அவர்களது உடல்நிலை எவ்வாறு இருக்கிறது என்றும் விசாரித்துள்ளார்.

உலக அளவில் பெரும் நாசங்களை விளைவித்து வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 24,506 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 775 பேர் பலியாகி இருக்கின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,429 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டு 57 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 72 பேருக்கு கொரோனா உறுதியாகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,775 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் என அனைவரும் சேவையாற்றி வரும் நிலையில் மக்களுக்கு உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க பத்திரிக்கையாளர்களும் இரவு,பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில்அண்மையில் சென்னையில் பத்திரிக்கை துறையில் பணியாற்றும் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர்களோடு பணியாற்றி வந்த ஊழியர்கள் 80-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 26 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் அனைவரையும் அரசு மருத்துவமனைகளில் தனிமை சிகிச்சையில் வைத்து மருத்துவர்கள் தீவிரமாக கவனித்து வருகின்றனர். மேலும் பாதிப்படைந்தவர்களின் குடும்பங்களும் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

சென்னையில் பத்திரிக்கையாளர்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பத்திரிக்கை துறையைச் சேர்ந்தவர்களுக்கு பரிசோதனகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் ஊடகவியலாளர்களை தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியிருக்கிறார். வீடியோ கால் மூலமாக பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் சிகிச்சைகள் குறித்தும் அவர்களது உடல்நிலை எவ்வாறு இருக்கிறது என்றும் விசாரித்துள்ளார். மேலும் அவர்களது குடும்பத்தினர் குறித்தும் விசாரித்து ஆறுதல் கூறியுள்ளார்.

பத்திரிக்கையாளர்களை தினமும் சந்தித்து கொரோனா பாதிப்புகளை அறிவித்து வந்த பீலா ராஜேஷ், தற்போது அவர்கள் பாதிப்படைந்திருக்கும் நிலையில் தொலைபேசி மூலம் ஆறுதல் கூறியிருக்கும் நிகழ்வு ஊடகத்துறையினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அண்மையில் பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கான செலவை அரசே ஏற்கும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

click me!