கடந்த நிதியாண்டில் கொல்கத்தாவுக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் உள்ள சென்னை விமான நிலையம் ரூ.169.56 கோடி லாபம் ஈட்டி இருக்கிறது.
2022-23 ஆம் ஆண்டில் இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு (AAI) அதிக லாபம் ஈட்டும் விமான நிலையங்களில் சென்னை விமான நிலையம் இரண்டாவது இடத்தில் உள்ளது. மக்களவை எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் கேட்ட கேள்விக்கு, விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் அளித்த பதில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில், இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு அதிக லாபம் ஈட்டிக் கொடுத்த விமான நிலையங்களில், கொல்கத்தா விமான நிலையம் முதல் இடத்தைப் பிடித்துள்றது. அதற்கு அடுத்த இடத்தில் சென்னை விமான நிலையம் உள்ளது. கோழிக்கோடு விமான நிலையம் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.
கொல்கத்தா விமான நிலையம் ரூ.482.30 கோடியும் சென்னை விமான நிலையம் ரூ.169.56 கோடியும் லாபம் ஈட்டி இருக்கின்றன. ஈட்டியுள்ளன. அடுத்த இடத்தில் இருக்கும் கோழிக்கோடு விமான நிலையம் ரூ.95.38 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் தகவல்படி, கடந்த நிதியாண்டில் 125 விமான நிலையங்களில் 17 விமான நிலையங்கள் மட்டுமே லாபம் ஈட்டியுள்ளன. 15 விமான நிலையங்கள் லாபத்தையும் நஷ்டத்தையும் ஏற்படுத்தவில்லை.
மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த விமான போக்குவரத்து அமைச்சகம், தேசிய பணமாக்கத் திட்டத்தின்படி, இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு உட்பட்ட 25 விமான நிலையங்கள் 2022 முதல் 2025 வரை குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இவை தனியார்மயமாக்க முன்மொழியப்பட்டுள்ளன என்று கூறியுள்ளது.